வாஷிங்டன்: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி உரையாற்றவிருக்கிறார். சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் அவர் உரையாற்றுவார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே ஈரான் போர் தொடர்பில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்நிலையில், பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிறப்புறவை வலுப்படுத்தும் வகையில் மன்னர் சார்ல்ஸ் ஒற்றுமைக்கான செய்தியை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னர் சார்ல்ஸ், அரசியார் கமிலாவுடன் அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இது இரண்டாவது முறை.
இதற்குமுன், 1991ஆம் ஆண்டு மன்னர் சார்ல்சின் தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி அமெரிக்க நாடாளுமன்றத்திலும் செனட் சபையிலும் உரையாற்றினார்.
மன்னர் சார்ல்சின் உரை கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அவர், நேட்டோ கூட்டமைப்பு, மத்திய கிழக்கு நிலவரம், உக்ரேன் விவகாரம் ஆகியவை குறித்து உரையாற்றுவார் என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மன்னர் சார்ல்சின் உரையானது அமெரிக்காவும் பிரிட்டனும் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருநாட்டுக்கும் இடையே உள்ள பொதுவான பண்புகளைத் தற்காப்பதன்வழி அமெரிக்காவும் பிரிட்டனும் அனைத்துலகப் பாதுகாப்பையும் செழிப்பையும் வலுப்படுத்த முடியும் என்று மன்னர் சார்ல்ஸ் வலியுறுத்தவிருக்கிறார்.
பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையிலும் அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்திருப்பதை மன்னர் சார்ல்ஸ் குறிப்பிட்டுப் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
மன்னர் சார்ல்சை மாபெரும் மனிதர் என்று வருணிப்பதுடன் பிரிட்டனின் அரச குடும்பம்மீது அதிக மரியாதை வைத்திருக்கும் திரு டிரம்ப், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரின் அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ளார்.
மன்னர் சார்ல்சின் அமெரிக்கப் பயணம் இருநாட்டு உறவில் அண்மை மாதங்களில் ஏற்பட்டுள்ள விரிசலைச் சரிசெய்யும் என்று திரு ஸ்டார்மர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

