லண்டன்: பிரிட்டனும் மேற்கத்திய நட்பு நாடுகளும் அனைத்துலகத் தற்காப்பு முன்னெடுப்பு ஒன்றை இணைந்து தொடங்க வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் வலியுறுத்த உள்ளதாக ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
கூட்டு ஆயுதக் கொள்முதலை மேற்பார்வையிடவும் மறுபடியும் ஆயுதம் வாங்குவதற்கான செலவுகளைக் குறைக்கவும் அந்தத் தற்காப்பு ஒத்துழைப்பு முயற்சி கைகொடுக்கும் என்று அவர் கருதுவதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
இவ்வார இறுதியில் நடைபெறும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் திரு ஸ்டார்மர் இந்தக் கருத்தை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்தச் செய்தித்தாள் கூறியுள்ளது.
பிரிட்டிஷ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அது அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மூன்று நாள் மாநாட்டில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) உரையாற்றும்போது நட்பு நாடுகளுக்கு இடையிலான அணுக்கத் தற்காப்பு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுப்பார்.
மேலும், அது தொடர்பாக இதர உலகத் தலைவர்களிடமும் அவர் ஆலோசனை நடத்துவார் என்று ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களை உறுதிசெய்ய பிரிட்டிஷ் அமைச்சரவை அலுவலகத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொடர்புகொண்டது. ஆனால், அந்த அலுவலகம் உடனடியாக எதனையும் தெரிவிக்கவில்லை.
தற்காப்புத் திட்டங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தியுள்ள நிதியத்தில் சேரும் வாய்ப்பைத் தவறவிட்ட பிரிட்டிஷ், அதில் இணைவது பற்றி மீண்டும் பரிசீலிக்கும் என்று இம்மாதத் தொடக்கத்தில் திரு ஸ்டார்மர் கூறியிருந்தார்.

