லண்டன்: பிரிட்டனில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு வரி விலக்கு வழங்கும் அணுகுமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அந்நாட்டு சில்லறை வர்த்தகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டால் அவர்கள் கூடுதலாக 3.65 பில்லியன் பவுண்டு (S$6.3 பில்லியன்) செலவிடுவர் என்று பிரிட்டனின் அனைத்துலக சில்லறை வர்த்தகர்கள் சங்கம் கூறியது.
மற்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் 1.5 பில்லியன் பவுண்டு செலவு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் வரி இல்லா விற்பனை அணுகுமுறை 2021ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.
பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் வரி இல்லாத விற்பனையை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் இது வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதாகவும் பிரிட்டிஷ் வர்த்தகர்கள் விவாதிக்கின்றனர்.
இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக அவர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
வரி இல்லா விற்பனை அணுகுமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் சில்லறை வர்த்தகர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குக் கடந்த ஆண்டு கடிதம் அனுப்பினர்.

