33 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தம்பி; பழைய புகைப்படத்தை வைத்து கண்டுபிடித்த தமக்கை

33 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தம்பி; பழைய புகைப்படத்தை வைத்து கண்டுபிடித்த தமக்கை

3 mins read
49f7ec22-b1cb-4bd3-8d8c-f61eed092e78
பல ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டதும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு கதறி அழுத அக்கா லீ லின், தம்பி லீ சின். - படம்: டாஸியாங் செய்தித் தளம்

பெய்ஜிங்: மத்திய சீனாவைச் சேர்ந்த ஒரு பெண், தனது சிறுவயது புகைப்படத்தை மட்டுமே ஆதாரமாக வைத்து, ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு துண்டு ரொட்டிக்காக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட தனது தம்பியைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

ஹூபெய் மாநிலத்தின் சியான்டாவ் நகரைச் சேர்ந்த 44 வயது லீ லின், தமது குடும்பத்தில் ஏற்பட்ட தொடர் சோகங்களால் சிறுவயதிலேயே தம்பி லீ சின்னைப் பிரிய நேரிட்டது என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

அவர்களது தாய் புற்றுநோயால் உயிரிழக்க, தந்தை மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் திரும்பவே இல்லை. இதனால் 11 மற்றும் 7 வயதில் ஆதரவற்ற நிலையில் திண்டாடிய அந்தச் சகோதரர்கள் குப்பைகளைச் சேகரித்து வாழ்ந்து வந்தனர்.

ஒருமுறை மழையிலிருந்து தப்பிக்க ஒரு லாரியின் பின்புறத்தில் ஏறித் தூங்கிய அவர்கள், தெரியாமல் வேறொரு நகரத்திற்குச் சென்றனர். அங்கு பசியுடன் அலைந்தபோது, ஒரு வயதான பெண் சின்னுக்கு ரொட்டி வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றார். உதவி கிடைக்கும் என நம்பி லின் தனது தம்பியை அனுப்பினார். ஆனால், அவன் திரும்பவே இல்லை.

“என் பொறுப்பில் இருந்தபோதுதான் தம்பி காணாமல் போனான். அந்தக் குற்ற உணர்வுடனேயே என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தேன்,” என்று லின் கண்ணீருடன் தெரிவித்தார்.

தாம் கடத்தப்பட்ட பிறகு, அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றபோது பிடிபட்டு, அடித்து உதைத்து, ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டுப் பட்டினியால் வாடியதாகத் தம்பி சின் கூறினார். பின்னர் ஒரு வழியாகத் தப்பித்து, பேருந்துகளில் பிச்சை எடுத்து உயிர் பிழைத்த அவரை, தெற்குச் சீனாவிலுள்ள குவாங்டாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தத்தெடுத்து ‘ஹான்’ என்ற குடும்பப் பெயரை அவருக்குக் கொடுத்தது.

“எனக்கு ஒரு அக்கா இருப்பது என் ஆழ்மனதில் எப்போதும் தெரியும். அவரைத் தேடுவதை நான் ஒருபோதும் நிறுத்தவில்லை,” என்று சின் கூறினார்.

இதற்கிடையே, லீ லின் கடந்த 33 ஆண்டுகளாகத் தன் தம்பியைத் தேடுவதற்காகப் பல இடங்களுக்குச் சென்று சில்லறை வேலைகளைச் செய்து பணம் சேர்த்தார். கட்டுமான இடங்களில் செங்கல் தூக்குவது, உணவகங்களில் பாத்திரம் கழுவுவது, தொழிற்சாலைகளில் வேலை செய்வது என நம்பிக்கையை இழக்காமல் உழைத்தார்.

பெற்றோரின் மரபணு கிடைக்காத நிலையில், தம்பியின் பழைய புகைப்படம் மட்டுமே அவரிடம் இருந்தது. இதற்காக சீனா முழுவதும் பயணம் செய்த அவர், பல்லாயிரக்கணக்கான காணாமல் போனோர் அறிவிப்புகளை விநியோகித்தார். இந்தத் தேடலுக்காக ஏறத்தாழ ஒரு மில்லியன் யுவான் (ஏறத்தாழ 145,000 அமெரிக்க டாலர்) செலவிட்டார்.

இந்த ஆண்டு ஜியாங்சி மாநிலக் காவல்துறையினர், முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குவாங்டோங்கில் வசிக்கும் ஹான் என்பவரை அடையாளம் கண்டனர். மரபணுச் சோதனையில் அவர் லின்னின் தம்பி என்பது உறுதியானது.

மார்ச் 23ஆம் தேதியன்று ஜியாங்சி காவல் நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். ஒரு ரொட்டிக்காகத் தம்பியைத் தொலைத்ததால், 33 ஆண்டுகள் கழித்து அவனைச் சந்தித்தபோது லின் பல பைகளில் ரொட்டிகளை வாங்கி வந்திருந்தார். தம்பி சின் அவருக்கு ஆறுதல் கூறி, “உன் மீது எந்தத் தவறும் இல்லை,” என்று தெரிவித்தார்.

மறுநாள், ஹூபெய் மாநிலத்தில் அவர்களது சொந்த ஊருக்குத் தம்பியை அழைத்துச் சென்ற லின், அங்கு சிவப்பு கம்பளம் விரித்து, பட்டாசு வெடித்து, பிறந்தநாள் கேக் மற்றும் பாரம்பரிய ‘டாங்யுவான்’ இனிப்புகளை வழங்கி உற்சாகமாக வரவேற்றார். பின்னர் தாயின் கல்லறைக்குச் சென்று, “உன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்” என்று கூறினார்.

தம்மை ஒருபோதும் கைவிடாத ஒரு சகோதரி கிடைத்தது தம் வாழ்வின் மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சின் நெகிழ்ச்சியுடன் கூறினார். லின் இப்போது தமது அடுத்த இலக்காக, காணாமல் போன தமது தந்தையைக் கண்டுபிடித்து, அவர் எதற்காகப் பிரிந்து சென்றிருந்தாலும் அவரை மன்னித்துவிட்டதாகக் கூறி வீட்டிற்கு அழைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்த நெகிழ்ச்சியான கதை சீன சமூக வலைத்தளங்களில் பலரின் மனதை உருக வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்