பண்டார் ஸ்ரீ பெகவான்: தேசிய மின்னிலக்க அடையாள முறையை புருணை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனிமனிதர்களுக்கான தனிப்பட்ட அடையாளத்தின் மின்னிலக்க வடிவமாகச் செயல்படும்.
தேசிய மின்னிலக்க நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி வெளிப்படுத்துவதாக புருணை போக்குவரத்து, தகவல் தொடர்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 2) தெரிவித்தன.
அதேவேளையில், பாதுகாப்பான, வசதியான, பயனாளர்களுக்கு உகந்த பயன்பாட்டையும் அரசாங்க மின்னிலக்கச் சேவைகளையும் புருணை மின்னிலக்க அடையாளம் (Brunei ID) எளிதாக்குகிறது என்றும் அவை குறிப்பிட்டன.
புருணைவாசிகள் அரசாங்க இணையச் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அவர்களின் அங்க அடையாளத்தை (பயோமெட்ரிக்) உறுதிப்படுத்துவதுடன் தங்கள் மின்னிலக்க அடையாளத்தைச் சரிபார்க்கவும் இது உதவுகிறது.
வலுவான தனிமனிதத் தகவல் பாதுகாப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கச் சேவையில் மின்னிலக்க உருமாற்றத்திற்கும் தேசிய மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பிற்கும் ஏற்ப, பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்புத் தேவைகள் ஆகியவற்றுடன் இணைந்த அமலாக்கத்தை அரசாங்கம் உறுதிசெய்யவுள்ளது. மற்ற அரசாங்க மின்னிலக்கச் சேவைகள் கட்டங்கட்டமாக ஒருங்கிணைக்கப்படும்.

