கராச்சி வெடிப்பில் இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

கராச்சி வெடிப்பில் இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

படம்: ஏஎஃப்பி

19 Feb 2026 - 6:53 pm

1 mins read

கராச்சி: பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில், வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 19) ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

அந்தச் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கராச்சியின் சோல்ஜர் பசார் பகுதியில் பாகிஸ்தானிய நேரப்படி அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரமலான் மாதத்தில் சூரிய உதயத்திற்குமுன் உண்ணப்படும் உணவை முஸ்லிம் குடும்பங்கள் தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

“பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்,” என்று மாநில மீட்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஹசன் கான் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்திருந்த அந்த மூன்று மாடிக் கட்டடம் வெடிப்புக்குப் பிறகு இடிந்து விழுந்ததாக அவர் கூறினார். வெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார் அவர்.

“எரிவாயு தொடர்பான வெடிப்பாக இருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இந்தச் சம்பவத்தின் உண்மையான காரணம் தெரியவரும்,” என்று மூத்த நகர அதிகாரி நஸ்ருல்லா அப்பாசி தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கராச்சியின் லயாரி பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 27 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்