முஸ்லிம் அல்லாதோருக்கான இடுகாடுகள், தகனச் சாலைகள்: வழிகாட்டி நெறிமுறைகள் பரிந்துரை

முஸ்லிம் அல்லாதோருக்கான இடுகாடுகள், தகனச் சாலைகள்: வழிகாட்டி நெறிமுறைகள் பரிந்துரை

2 mins read
1f0f516c-15da-422b-801d-51f33dc03ff8
தகனச் சாலைகள் அமைவிடங்களுக்கும் பிற மேம்பாட்டு எல்லைகளுக்கும் இடையே குறைந்தது 30 மீட்டர் இடைவெளிப் பகுதி இருக்க வேண்டும். தகனச் சாலைகள் குடியிருப்பு, வர்த்தகம் , பொழுதுபோக்கு அல்லது சுற்றுலாத் தளங்களுக்குரிய பகுதிகளுக்குள் அமைக்க அனுமதியில்லை. - படம்: சின் சியூ டெய்லி

பெட்டாலிங் ஜெயா: முஸ்லிம் அல்லாதோருக்கான இடுகாடுகள், தகனச் சாலைகள், மற்றும் அஸ்திக்கூடங்கள் ஆகிய வசதிகளுக்கான திட்டமிடல், சுற்றுப்புறம் மற்றும் இருப்பிட விதிகளை நாடு தழுவிய அளவில் வலுப்படுத்துவதற்காகப் புதிய தேசியத் திட்டமிடல் வழிகாட்டி நெறிமுறை வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மலேசியாவின் வீடமைப்பு, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தீபகற்ப நகர, ஊரமைப்புத் துறையால் தயாரிக்கப்படவுள்ள இந்த வழிகாட்டி நெறிமுறைகளின்கீழ், இடுகாடுகள் மற்றும் தகனச்சாலைகளின் திட்டமிடல் பொதுச் சுகாதாரம், பாதுகாப்பு, பொருத்தமான நிலங்கள் பயன்படுத்துவது , நிலப்பரப்பு அமைப்பு, மண் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“இருப்பிடங்களைத் தேர்வு செய்யும்போது வெள்ளப் பெருக்கு ஏற்படும் பகுதிகள், நிலச்சரிவு அபாயமுள்ள இடங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளையும் சுற்றுப்புறத்துக்கும் அருகிலுள்ள சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடங்களையும் தவிர்க்க வேண்டும்,” என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக திரு ஙா பதிலளித்தார்.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் தகனச் சாலைகள் அமைப்பதற்கான குறைந்தபட்சத் தூரம், சுற்றுப்புறத் தாக்க மதிப்பீட்டுத் தேவைகள், காற்றுத் தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாடு மற்றும் உள்ளூர் சமூகங்களுடனான கலந்துரையாடல் ஆகியவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஙா பின்வரும் விதிமுறைகளை விளக்கினார்.

தகனச் சாலைகள் அமைவிடங்களுக்கும் பிற மேம்பாட்டு எல்லைகளுக்கும் இடையே குறைந்தது 30 மீட்டர் இடைவெளிப் பகுதி இருக்க வேண்டும். தகனச் சாலைகள் குடியிருப்பு, வர்த்தகம் , பொழுதுபோக்கு அல்லது சுற்றுலாத் தளங்களுக்குரிய பகுதிகளுக்குள் அமைக்க அனுமதியில்லை.

டீசல் அல்லது பெட்ரோல் மூலம் இயங்கும் தகனச் சாலைகளை கனரகத் தொழிற்பேட்டை பகுதிகளில் அமைக்க திட்டமிடலாம்.

கிராமப் பகுதிகளில் திறந்தவெளி எரியூட்டல் அனுமதிக்கப்படும். எனினும், கரிம மண்படிவப் பகுதிகளில் இதற்கு அனுமதியில்லை. மேலும், பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு தகனச் சாலைத் திட்டமும் அந்தந்த உள்ளாட்சி அதிகார அமைப்பிடமிருந்து திட்ட அனுமதி ஒப்புதலைப் பெற வேண்டும்.

இத்தகைய விண்ணப்பங்களை ஆய்வு செய்யும்போது, இடப் பொருத்தம் , உள்கட்டமைப்பு வசதிகள் , போக்குவரத்து முறைகள் மற்றும் அது சார்ந்த பிற தொழில்நுட்ப அமைப்புகளின் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்பு முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஙா உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
தகனச்சாலைமலேசியாவழிகாட்டி நெறிமுறை