தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய நெடுஞ்சாலைகளில் வலது தடத்தைப் பயன்படுத்த பேருந்துகள், லாரிகளுக்குத் தடை

2 mins read
1b147e4b-c3cd-48de-a3fd-c4525dbcf444
விபத்துகளைத் தடுக்க கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

கோலாலம்பூர்: நெடுஞ்சாலையின் வலது தடத்தைப் பயன்படுத்த பேருந்துகளுக்கும் லாரிகளுக்கும் மலேசியா தடை விதிக்க இருக்கிறது.

நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள் இடது தடத்தை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் வேக வரம்பை மீறக்கூடாது என்றும் மலேசியப் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் ஜனா சந்திரன் முனியன் தெரிவித்ததாக தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

“கனரக வாகனங்கள், அவற்றுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டுமாயின், இரண்டாவது தடத்துக்கு மாறி வாகனத்தைக் கடந்து சென்றதும் திரும்பவும் இடது தடத்துக்கு சென்றுவிட வேண்டும். வலது பக்கம் உள்ள மூன்றாவது தடத்தை கனரக வாகனங்கள் அறவே பயன்படுத்த முடியாது,” என்று திரு முனியன் கூறினார்.

இந்த விதிமுறை 2015ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட திரு முனியன், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே, போக்குவரத்து அமைச்சரிடம் இந்தப் பரிந்துரை மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

இந்நிலையில், விபத்துகளைத் தடுக்க கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மலேசியாவின் போக்குவரத்து அமைச்சு அறிவித்தது.

அனைத்துப் புதிய லாரிகளிலும் இந்த வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகத் திரு முனியன் தெரிவித்தார்.

கனரக வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியையும் பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கனரக வாகனங்கள் சோதனையிடப்படும்.

இதற்கிடையே, நெடுஞ்சாலைகளின் வலது தடத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்குத் தடை விதித்திருப்பதைக் குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

தடையைச் சிலர் வரவேற்றனர்.

“முன்னால் இருக்கும் வாகனங்களை முந்திச் செல்ல மட்டுமே ஆக வலது தடத்தைப் பயன்படுத்த வேண்டும். பேருந்துகளும் லாரிகளும் கனரக வாகனங்கள். அவை மெதுவாகச் செல்லக்கூடியவை. கனரக வாகனங்களுக்கு ஏற்கெனவே வேக வரம்பு விதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சு எடுத்துள்ள இந்த முடிவு மிகச் சரியானது. அதை ஆதரிக்கிறோம்,” என்று மலேசிய பேருந்துச் சேவை நிறுவனங்களுக்கான சங்கத்தின் தலைவர் முகம்மது அஷ்ஃபர் அலி தெரிவித்தார்.

ஆனால், நெடுஞ்சாலையின் வலது தடத்தைக் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று சிலாங்கூர், கோலாலம்பூர் லாரி ஓட்டுநர்களுக்கான சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஆல்வின் சூங் கூறினார்.

புதிய விதிமுறையால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சுமுகமாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

முதற்கொண்டு வலது தடத்தைக் கனரக வாகனங்கள் ஏன் பயன்படுத்துகின்றன என்பதை பற்றி அமைச்சு நினைத்துப் பார்க்கவில்லை என்று திரு சூங் கூறினார்.

“புதிய விதிமுறை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. சில நெடுஞ்சாலைகளில் இரண்டு தடங்கள் மட்டுமே உள்ளன. அத்தகைய சூழலில் வலது தடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும்,” என்றார் திரு சூங்.

குறிப்புச் சொற்கள்