வாகன உற்பத்தியில் முதலிடம் பிடிக்க பிஒய்டி திட்டம்

வாகன உற்பத்தியில் முதலிடம் பிடிக்க பிஒய்டி திட்டம்

2 mins read
f08555c4-2475-45eb-9f9a-47869f18cd32
பிஒய்டி நிறுவனத்தின் ஏற்றுமதி இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 65 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. - படம்: இபிஏ

‌‌‌‌ஷாங்காய்: சீனாவின் பிஒய்டி நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் ஆகப் பெரிய வாகன உற்பத்தியாளராக மாறும் என்று எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் வாங் சுவான்ஃபூ கூறியுள்ளார்.

நிறுவனத்தின் பங்குவிலை கணிசமாகச் சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திரு வாங் கருத்துரைத்தார்.

கிட்டத்தட்ட 4.6 மில்லியன் வாகனங்களைக் கடந்த ஆண்டு விற்பனை செய்த பிஒய்டி, உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

ஷென்சென் தலைமையகத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் வருடாந்தர முதலீட்டாளர் கூட்டத்தில், திரு வாங் ஏறக்குறைய 1,000 முதலீட்டாளர்கள்முன் உரையாற்றினார்.

‘பிளேட் பேட்டரி’ என்ற இரண்டாம் தலைமுறை மின்கல உற்பத்தியை விரைவுபடுத்துவதில் பிஒய்டி நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகத் திரு வாங் குறிப்பிட்டார்.

“அடுத்த ஐந்தாண்டுகளில் வாகன உற்பத்தியில் பிஒய்டி நிறுவனம் நிச்சயமாக முதல் இடத்தைப் பிடித்துவிடும்,” என்ற அவர், நிறுவனத்தின் வலுவான ஏற்றுமதியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார்.

மின்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகளும் விரைவாக மாறிவரும் தொழில்நுட்பங்களும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று திரு வாங் குறிப்பிட்டார்.

இருப்பினும், உள்ளூர் நிறுவனங்களுடன் ஏற்பட்ட கடுமையான போட்டியால் சரிந்த உள்நாட்டு விற்பனையை மீண்டும் வலுப்படுத்த அந்நிறுவனம் சிரமப்படுகிறது.

கடந்த ஆண்டு ஹாங்காங்கில் உச்சத்தைத் தொட்ட பிஒய்டி நிறுவனத்தின் பங்கு விலை 45 விழுக்காட்டும் மேல் சரிந்தது.

அனைத்துலக அளவில் வாகன உற்பத்தியில் பிஒய்டி நிறுவனம் முதலிடத்தைப் பிடிக்க டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை அது பின்னுக்குத் தள்ளியாக வேண்டும்.

பிஒய்டி நிறுவனத்தைவிட அது இரண்டு மடங்கு வாகனங்களைக் கடந்த ஆண்டு விற்பனை செய்தது.

எனினும், பிஒய்டி நிறுவனத்தின் ஏற்றுமதி இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான காலத்தில் 65 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

குறிப்புச் சொற்கள்