பேங்காக்: தாய்லாந்து பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் ஜூன் 23ஆம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ளார். ஒரு கசிந்த தொலைபேசி அழைப்பு அவரது அரசாங்கத்தைக் கவிழ்க்கக்கூடும் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் 38 வயது மகளான அவர், கடந்த வாரம் தனது முக்கிய கூட்டணிக் கட்சி பதவி விலகியதால் காலியான அமைச்சர் பதவிகளை நிரப்பத் தொடங்கியுள்ளார்.
ஓர் ஆண்டுக்கும் குறைவான காலம் பதவியில் இருக்கும் திருமதி பெடோங்டார்ன், இப்போது அரசியலமைப்பு நீதிமன்ற வழக்கையும் எதிர்கொள்கிறார். அது அவரைப் பிரதமர் பதவியில் இருந்து அகற்றக்கூடும்.
முன்னாள் கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுடனான கசிந்த தொலைபேசி அழைப்பின் போது, நாட்டைக் குறைத்து மதிப்பிட்டதாகவும் ராணுவத்தை அவமதிப்பதாகவும் விமர்சகர்கள் குற்றம் சாட்டியதால், கடந்த வாரம் அவர் பதவி விலக அல்லது தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அழுத்தத்துக்கு ஆளானார். அந்த தொலைபேசி அழைப்பின்போதுஎல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த அழைப்பைக் கடுமையாகச் சாடிய, பழமைவாத பூம்ஜைதாய் கட்சி, திருமதி பெடோங்டார்னின் பியூ தாய் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் அந்த கூட்டணிக்கு ஒரு மிகச் சிறிய பெரும்பான்மைதான் உள்ளது.
ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகள் தாங்கள் கூட்டணியில் நீடிப்பதாகக் கூறியதால் நெருக்கடிநிலை சீரானது. மேலும் பியூ தாய் கட்சியின் தலைமைச் செயலாளர் சொராவோங் தியென்தோங், மீதமுள்ள 10 கட்சிகளும் அரசாங்கத்துடன் நீடிப்பதாக ஜூன் 23ஆம் தேதி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
புதிய அமைச்சரவை பட்டியல் ஜூன் 27ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். ஆனால் கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்து வருவதால் தற்காப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய பதவிகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற நெருக்கடியிலிருந்து திருமதி பெடோங்டார்ன் வெளியேறினாலும், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் வடிவத்தில் ஒரு பெரிய அச்சுறுத்தல் உருவாக வாய்ப்புள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரு. ஹுன் சென்னுடனான தொலைபேசி அழைப்பின்போது திருமதி பெடோங்டார்னின் நடத்தைக்காக அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பழமைவாத செனட்டர்கள் குழு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.