கோலாலம்பூர்: தென்கிழக்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்யவும் அதே வேளையில் எரிசக்திப் பாதுகாப்பை பலப்படுத்தவும் வட்டார மின்சாரக் கட்டமைப்பு மற்றும் அணுசக்தி உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தி ஆதாரங்களை நாட வேண்டும் என்று அனைத்துலக எரிசக்தி ஆணையத்தின் தலைவர் ஃபாத்தி பிரோல் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் உருவான உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, அதிக விலையுள்ள எரிபொருள் இறக்குமதியை நம்பியிருக்கும் தென்கிழக்காசிய நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ‘தென்கிழக்காசிய எரிசக்திக் கண்ணோட்டம் 2026’ அறிக்கையின்படி, தென்கிழக்காசியா இன்னும் புதைபடிவ எரிபொருட்களையே அதிகம் சார்ந்துள்ளது.
இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் கடுமையான வானிலையும் மின் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பேரளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
எதிர்காலத்தில் எழக்கூடிய இப்பிரச்சினைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அணுசக்தி மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரோல் தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு வரும் ‘ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு’ அமைக்கப்பட்டால், அது எல்லை கடந்த மின் இணைப்புகளை உருவாக்கி, மின்சாரத்தின் தேவையையும் விநியோகத்தையும் சமநிலைப்படுத்த உதவும்.
இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்து நாடுகளுக்கான செலவைக் குறைக்கும் என்றாலும், 11 ஆசியான் நாடுகளின் வெவ்வேறு மின் கட்டமைப்புகளை ஒன்றிணைப்பதிலும், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் தரநிலைகளை ஒத்திசைப்பதிலும் உள்ள சவால்களை நாடுகள் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நிறைவேறினால், வட்டார மின்சாரக் கட்டமைப்பு தென்கிழக்காசியாவின் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இதன் மூலம் ஏறத்தாழ 700 மில்லியன் பேர் பலனடைவர்.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்காசியா வளர்ச்சி காணும் அதே வேளையில் அதன் எரிபொருள் இறக்குமதி செலவினமும் அதிகரிக்கும்.
இதைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தூய எரிசக்தி, மின்சார வாகனங்கள், எரிசக்தி மற்றும் மின்சாரம் தொடர்பான முதலீடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் எரிபொருள் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும் சாத்தியகூறுகளைத் தென்கிழக்காசியா குறைக்கலாம் என்று அனைத்துலக எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

