தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க-சீன பதற்றத்தைத் தணிக்க வேண்டுகோள்: அனைத்துலக நிதியம்

2 mins read
6f730ead-bb67-4b1f-8873-e20ae0699989
அனைத்துலக பண நிதியமும் உலக வங்கியும் இணைந்து நடத்திய இவ்வாண்டுக்கான வருடாந்தரக் கூட்டங்களில் பண நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் பதற்றத்தைத் தணித்து உலகப் பொருளியலுக்கான அரிய வளங்களின் விநியோகம் தடைப்படுவதைத் தவிர்க்கும்படி அனைத்துலக பண நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் பொருளியல் வளர்ச்சியை அது பாதிக்கும் என்ற அவர், ஏற்கெனவே நலிவடைந்துள்ள பொருளியலை அது இன்னும் மோசமாக்கும் என்றார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தலைதூக்கியுள்ள நிலையில் அனைத்துலக பண நிதியமும் உலக வங்கியும் இவ்வாண்டுக்கான வருடாந்தரக் கூட்டங்களை நடத்தின.

அனைத்துலக பண நிதியம் இவ்வாண்டுக்கான உலகப் பொருளியல் வளர்ச்சியை 3.2 விழுக்காடாக முன்னுரைத்தது. ஜூலையில் அது 3.0 என்றும் ஏப்ரலில் அது 2.8 என்றும் முன்னுரைத்தது. ஆனால் அது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட அண்மைய சச்சரவைக் கணக்கில் எடுக்கவில்லை.

அடுத்து என்ன நடக்கிறது என்பதை அனைத்துலக பண நிதியம் உன்னிப்பாகக் கவனிக்கும் என்ற திருவாட்டி ஜார்ஜிவா, உறுப்பினர்கள் பயந்ததைவிட ஆறு மாதத்துக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்புநோக்க உலகப் பொருளியல் இன்னும் சிறப்பாக உள்ளதாகக் கூறினார்.

நாடுகளும் மாற்றங்களைச் செய்யவும் தொடரும் பதற்றத்தைத் தணிக்கவும் கூடுதல் முயற்சிகள் எடுக்க தயாராக உள்ளன என்றார் அவர்.

“இருப்பினும் இன்னும் ஒருவித பதற்றம் நிலவுகிறது. உலகப் பொருளியல் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு இன்னும் சரியாகச் செயல்படவில்லை. அதோடு எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற குழப்பமும் நிலவுகிறது,” என்று திருவாட்டி ஜார்ஜிவா விளக்கமளித்தார்.

இந்நிலையில், அனைத்துலக நிதியம், நிதிக் குழுவின் தலைமையான சவுதி நிதியமைச்சர் முகமது அல் ஜடான், வருடாந்தர கூட்டங்களின்போது நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் ஆக்ககரமான முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார்.

பிரான்சின் புதிய மேம்பாட்டு அமைச்சர் எலெனார் கரோய்ட், கூட்டத்தின் மூலம் நிதி மேம்பாட்டுக்கான ஆதரவு வலுப்பெற்றது என்றார்.

குறிப்புச் சொற்கள்