பேங்காக்: தாய்லாந்து சிறையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கம்போடிய வீரர்களைச் சோதித்துப் பார்க்கும்படி ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் ஆணையம், செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துலக குழு ஆகிய அனைத்துலக அமைப்புகளுக்குத் தாய்லாந்து ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
சண்டைநிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து பிடித்துவைத்த வீரர்களைத் திருப்பி அனுப்பிய தாய்லாந்து அவர்களில் சிலரைச் சித்திரவதை செய்ததாகக் கம்போடியா குறைகூறியது.
தாய்லாந்து ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வின்தாய் சுவரீ, கம்போடியா சுமத்தும் பழியை நிராகரித்தார்.
சண்டைநிறுத்தம் திடீரென அமல்படுத்தப்பட்டாலும் போர் இன்னும் உண்மையாக முடியவில்லை என்றார் அவர். எனவே, அனைத்துலக சட்டத்தின்கீழ் தற்காலிகமாகத் தடுப்புக் காவலில் வைக்கும் ராணுவத்தின் நடைமுறைக்கு அனுமதி உண்டு என்றார் அவர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளின் நலனைச் சோதிக்க ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் ஆணையம் போன்ற அனைத்துலக அமைப்புகளை வரவழைக்க தாய்லாந்து ராணுவம் திட்டமிட்டுள்ளது என்றும் அதற்கு முழுமையாக ஆயத்தநிலையில் இருக்கிறது என்றும் மேஜர் ஜெனரல் வின்தாய் கூறினார்.
ஜெனிவா கன்வென்ஷன்ஸ் உடன்பாட்டின் கட்டமைப்புக்குள் தாய்லாந்தின் நடைமுறைகள் இருப்பதை அவர் உறுதிபடுத்தினார்.
தாய்லாந்து ராணுவத்தின் நம்பகத்தன்மையைக் கீழறுக்கும் நோக்கில் இந்த விவகாரத்தைக் கம்போடியா திசைதிருப்ப முயற்சி செய்யக்கூடும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துலக அமைப்புகளுக்கு அழைப்பு விடுவதாகவும் மேஜர் ஜெனரல் வின்தாய் விளக்கம் அளித்தார்.
தாய்லாந்து தன் அனைத்து செயல்பாடுகளையும் அனைத்துலக விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்வதில் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.