பாப்புவா நியூ கினி எரிவாயுத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய எக்ஸான்மொபில் நிறுவனத்திற்கு அழைப்பு

பாப்புவா நியூ கினி எரிவாயுத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய எக்ஸான்மொபில் நிறுவனத்திற்கு அழைப்பு

படம்: ஏஎஃப்பி

02 Nov 2026 - 4:41 pm

2 mins read

சிட்னி: எக்ஸான்மொபில் நிறுவனம் பாப்புவா நியூ கினியில் தனது எரிவாயுத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றால், உலகின் மிக அரிய வகை வௌவால்களில் ஒன்று பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்காகப் பணியாற்றும் சட்ட நிறுவனம் ஒன்று திங்கட்கிழமை (நவம்பர் 2) அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி எரிசக்தி நிறுவனமான எக்ஸான்மொபில், பாப்புவா நியூ கினியின் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள பெரிய இயற்கை எரிவாயு வயல்களைப் பயன்படுத்தும் நோக்கிலான ‘பாப்புவா எல்என்ஜி’ திட்டத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசம் பெறுவதற்கான ஒப்பந்தத்தை அக்டோபர் மாதத்தில் மேற்கொண்டது.

வெளியேற்றப்படும் எரிவாயுவைக் கடலோரச் சுத்திகரிப்பு ஆலைக்குக் கொண்டுசெல்வதற்காக 320 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய் அமைக்கப்பட உள்ளது. அதன் மூலம் ஆண்டுதோறும் 5.6 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படவுள்ளது.

அத்திட்டம் குறித்து அரசாங்கத்தின் இறுதி முடிவு டிசம்பர் மாதத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுப்புறச் சட்ட, சமூக உரிமைகளுக்கான நிலையம், தனது கவலையை வெளிப்படுத்தி எக்ஸான்மொபில் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.

ஏஎஃப்பி செய்தி நிறுவனம் பார்வையிட்ட அந்தக் கடிதத்தில், “பாப்புவா எல்என்ஜி திட்டப் பகுதி, அடர்ந்த காடுகள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பசுமை மண்டலங்கள், சதுப்புநிலங்கள் நிறைந்த கடலோரப் பகுதிகள் வழியாக அமையும்,” என்று அந்த நிலையம் குறிப்பிட்டது.

“இத்திட்டத்தின் நேரடித் தாக்கத்திற்கு உள்ளாகும் பகுதியில், ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் 27 உயிரினங்கள் வாழ்கின்றன,” என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு பெரும் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்களில் ‘பல்மர்ஸ் பழ’ வௌவாலும் ஒன்று என அந்த நிலையம் கூறியது. அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் இறுதிக் கணக்கெடுப்பின்படி, காட்டுப்பகுதிகளில் இதுபோன்ற வௌவால்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்