கோஹினூர் வைரத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு வேண்டுகோள்

கோஹினூர் வைரத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு வேண்டுகோள்

1 mins read
9e97add4-c1d9-43e8-8725-3ffb4a30432d
கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை பிரிட்டி‌ஷ் அரசியார் அணிந்திருந்தார். - படம்: வில்லியம் டால்ரைம்பல்

நியூயார்க்: கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்குமாறு அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி, பிரிட்டி‌ஷ் மன்னர் சார்ல்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னர் சார்ல்ஸ், அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பயணத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை (ஏப்ரல் 29) திரு மம்தானி இந்த வேண்டுகோளை விடுத்தார்.

கோஹினூர் வைரத்தின் பின்னணி

பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் 1800களில் இந்தியாவிலிருந்து கோஹினூர் வைரத்தை எடுத்துக்கொண்டனர்.

பிரிட்டி‌ஷ் அரசியாரின் கிரீடத்தில் அவ்வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

மம்தானி, மன்னர் சார்ல்ஸ் சந்திப்பு

9/11 சம்பவத்தின் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்ல்சையும் அரசியார் கமிலாவையும் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்பு வாய்ப்பு கிடைத்தால் அவர்களிடம் எதைப் பற்றிப் பேசப்போவதாக திரு மம்தானியிடம் கேட்கப்பட்டது.

நியூயார்க் மேயர் (இடமிருந்து இரண்டாவது), பிரிட்டி‌ஷ் மன்னர் சார்ல்ஸ்.
நியூயார்க் மேயர் (இடமிருந்து இரண்டாவது), பிரிட்டி‌ஷ் மன்னர் சார்ல்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

“நிகழ்ச்சியைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மன்னரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் கோஹினூர் வைரத்தைத் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுக்கொள்வேன்,” என்றார் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட திரு மம்தானி. அதேவேளை, 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் தமது கவனம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னர் சார்ல்சைச் சந்தித்தபோது சர்ச்சைக்குரிய விவகாரமான கோஹினூர் வைரத்தைப் பற்றி திரு மம்தானி பேசினாரா என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்