‌ஷின்சோ அபேயைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறு குரல்

2 mins read
91d91b68-2612-413d-b3a7-6248f57b7226
‌ஷின்சோ அபேயைக் கொன்றதை ஒப்புக்கொண்ட தெத்சுயா யமாகாமி. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறு அந்நாட்டின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

திரு அபே 2022ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜப்பானின் சர்ச்சைக்குரிய யுனிஃபிக்கே‌ஷன் தேவாலய சமயக் குழுவுக்கும் அந்நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் வெளிச்சத்துக்கு வந்தன.

தெத்சுயா யமாகாமி, திரு அபேயைக் கொன்ற குற்றத்தை நாரா மாவட்ட நீதிமன்ற விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். யுனிஃபிக்கே‌ஷன் தேவாலயக் குழுவுக்குத் தனது தாய் பெரிய அளவில் நன்கொடை அளித்திருந்ததால் தனது குடும்பம் மோசமான நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய காரணத்திற்காக அந்தக் குழுவின் மீது தனக்கு வெறுப்புணர்வு இருந்ததை 45 வயது தெத்சுயா யமாகாமி தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் தேதி ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரசார உரையாற்றிக்கொண்டிருந்தபோது மரணம் விளைவிக்கும் வகையில் திரு அபேயைச் சுட்டதாக யமாகாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும். யுனிஃபிக்கே‌ஷன் தேவாலயக் குழுவுடன் நெருங்கிய தொடர்பிருக்கும் குழு ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் காணொளி வழி பேசிய திரு அபேயைச் சுடுவதன் மூலம் அக்குழுவின் மீது கவனமும் கண்டனமும் திரும்ப உதவும் என்று யமாகாமி நம்பியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். அந்த தேவாலயக் குழுவுக்குத் தனது தாய் 100 மில்லியன் யென் (828,746 வெள்ளி) தொகையை நன்கொடையாக வழங்கியதைத் தொடர்ந்து தனது குடும்பம் நொடித்துப் போனதால் யமாகாமிக்கு அதன் மீது வெறுப்பு ஏற்பட்டதாக அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த அம்சம் கருத்தில்கொள்ளப்பட்டு இவ்வழக்கில் தீர்ப்பைத் தளர்த்துவது குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

1984ல் தனது கணவர் உயிரை மாய்த்துக்கொண்ட பிறகு யமாகாமியின் தாய் 1991ல் யுனிஃபிக்கே‌ஷன் தேவாலயக் குழுவில் சேர்ந்துகொண்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்