கம்போடிய, தாய்லாந்து எல்லையில் அமைதி திரும்பியது: ராணுவத் தளபதிகள் பேச்சு

1 mins read
686b38d9-56ca-4a16-98da-fdfb4eebb722
கம்போடிய, தாய்லாந்து ராணுவத்தினர் ஜூலை 29 காலையில் பேச்சு நடத்தினர். - படம்: ராய்ட்டர்ஸ்

கம்போடிய, தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைதி திரும்பிய நிலையில் அந்நாடுகளின் ராணுவத் தளபதிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) காலை பேச்சு நடத்தியிருக்கின்றனர். ஐந்து நாள்கள் நீடித்த சண்டை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேறு இடங்களுக்குச் சென்ற மக்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். சண்டையில் கிட்டத்தட்ட 40 பேர் மாண்டனர். 300,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டுச் செல்ல நேரிட்டது.

கம்போடிய, தாய்லாந்துத் தலைவர்கள் மலேசியாவில் திங்கட்கிழமை (ஜூலை 28) சந்தித்துப் பேசினர். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்னெடுத்த சமரசப் பேச்சின் காரணமாகத் தலைவர்கள் இருவரும் எல்லைப் பூசலை முடிவுக்குக் கொண்டுவர இணங்கினர்.

எல்லைப் பகுதியில் சந்தித்த இரு நாடுகளின் ராணுவத் தளபதிகளும் சண்டை நிறுத்தத்தைக் கட்டிக்காக்கவும் துருப்புகளின் நடமாட்டத்தை நிறுத்தவும் ஒப்புக்கொண்டனர். காயமுற்றவர்களைத் திருப்பியனுப்பவும் சடலங்களை ஒப்படைக்கவும் அவர்கள் இணங்கினர்.

எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்க இரு தரப்பும் முடிவுசெய்துள்ளன.

குறிப்புச் சொற்கள்