கோலாலம்பூர்: கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளை ஆசியானைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு சோதனையிடுவதற்கு இருநாட்டு உயர் தற்காப்பு அதிகாரிகளும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாள்கள் வன்முறை நீடித்த அந்தப் பகுதியில் மீண்டும் சண்டை மூளாமல் இருப்பதற்கு உதவிசெய்யவும் கண்காணிப்புக் குழுவுக்கு அவர்கள் ஒப்புதல் வழங்கினர்.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஜூலை மாதம் சண்டை மூண்டதில் எல்லைப் பகுதியில் உள்ள இருநாட்டினரில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டதோடு 300,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
ஆசியான் அமைப்புக்குத் தலைமை தாங்கும் மலேசியாவும் சீனாவும் அமைதிகாக்கும்படி பலமுறை கூறியும் மோதல் நீடித்தது.
இந்நிலையில், கம்போடியாவும் தாய்லாந்தும் அமைதிகாத்தால் ஒழிய வரி தொடர்பான சமரசப் பேச்சு தொடராது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிர்மப் சொன்னதை அடுத்து இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டனர்.
நிரந்தரச் சண்டை நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து பேச கம்போடியாவின் தற்காப்பு அமைச்சர் டீ செய்ஹாவும் தாய்லாந்தின் தற்காலிகத் தற்காப்பு அமைச்சர் நட்டஃபொன் நார்க்ஃபனிட்டும் கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஆயுதப் படையின் தலைமையகத்தில் வியாழக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி சந்தித்தனர்.
“தாய்லாந்திலும் கம்போடியாவிலும் மலேசியா வழிநடத்தும் ஆசியான் ராணுவத்தைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு பணியில் ஈடுபடும்,” என்ற திரு நட்டஃபொன் அந்தந்த நாட்டில் உள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் எல்லையைத் தாண்டமாட்டார்கள் என்றார்.
“தாய்லாந்தும் கம்போடியாவும் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகள். அவற்றுக்கு இடையிலான சண்டைக்குத் தீர்வுகாண்பது நமது மக்கள் அமைதி வாழ்க்கைக்குத் திரும்ப உதவும்,” என்று திரு நட்டஃபொன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த இரண்டு வாரங்களிலும் ஒரு மாதம் கழித்தும் கூடுதல் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று தாய்லாந்தும் கம்போடியாவும் கூட்டறிக்கை வெளியிட்டன.
கோலாலம்பூரில் மூத்த அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று நாள் கலந்துரையாடலுக்குப் பிறகு சண்டைநிறுத்தத்திற்கான நிபந்தனைகள் நான்காம் நாளில் சீன, அமெரிக்க பிரதிநிதிகள் முன்னிலையில் முடிவுசெய்யப்பட்டது.
“சண்டையை நிறுத்துவதற்கான நிபந்தனைக்கும் இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன,” என்றார் கம்போடியப் பிரதமர் ஹுன் மனெட்.