டிசம்பர் 24ல் கம்போடியா, தாய்லாந்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை

2 mins read
8157c305-68dc-45be-afc8-f87f06d07e4c
ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ. - படம்: இபிஏ

கோலாலம்பூர்: எல்லைப் போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், தாய்லாந்து, கம்போடியா நாடுகளின் தற்காப்பு அதிகாரிகள் புதன்கிழமை (டிசம்பர் 24) அன்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தாய்லாந்தின் உயர்மட்ட அரசதந்திரி திங்கட்கிழமை (டிசம்பர் 22) தெரிவித்தார்.

ஜூலை மாதம் முந்தைய சுற்று மோதல்களுக்குப் பிறகு, ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள மலேசியா, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆகியோரால் முதலில் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு போர்நிறுத்தத்தைக் காப்பாற்றும் பொருட்டு, ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் டிசம்பர் 22ஆம் தேதி கோலாலம்பூரில் சந்தித்த சிறப்புக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இரு நாடுகளும் தங்கள் பொது எல்லைக் குழுவைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. இது ஒரு நிறுவப்பட்ட இருதரப்பு வழிமுறையாகும். தாய்லாந்தின் சாந்தபுரி மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ கோலாலம்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.

இது குறித்து கம்போடியாவின் தற்காப்பு அமைச்சு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

கம்போடியாவின் நிலையான உறுதிப்பாடு மற்றும் விரிவான செயல்படுத்தல் திட்டத்துடன் தாய்லாந்து ஓர் உண்மையான போர்நிறுத்தத்தை விரும்புகிறது என்று திரு சிஹாசக் கூறினார். இதன் தொடர்பில், மேலும் செயல்முறையை முன்னோக்கி நகர்த்துவதற்கு கண்ணிவெடிகளை அகற்றுவது அவசியம் என்றும் கூறினார்.

“போர் நிறுத்தத்தை சாதாரணமாக அறிவிக்க முடியாது; அதற்குப் பேச்சுவார்த்தை தேவை,” என்று திரு சிஹாசக் மேலும் கூறினார்.

டிசம்பர் 8ஆம் தேதி மீண்டும் சண்டை தொடங்கியதிலிருந்து, டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டம், இரு அரசாங்கங்களும் சம்பந்தப்பட்ட முதல் நேரடிச் சந்திப்பாகும். திங்கட்கிழமையன்று கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன், மோதலை நிறுத்துவதில் கூட்டணி இன்னும் வலிமையான பங்கை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“வட்டார அமைதியையும் நிலைத்தன்மையையும் பேணுவதற்கு ஆசியான் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்,” என்று திரு முகமது ஹசன் கூறினார்.

“எங்கள் இலக்கு பதற்றத்தைத் தணிப்பதைத் தாண்டியது. முரண்பட்ட கட்சிகளிடையே நம்பிக்கையை வளர்ப்பதை நாம் தீவிரப்படுத்த வேண்டும். வேறுபாடுகள் இருந்தபோதிலும் உரையாடலுக்கான எல்லைகளை வகுக்க வேண்டும்,” என்று அவர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்