பேங்காக்: கம்போடிய எல்லையில் தொடர்ந்துவரும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு தாய்லாந்துப் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். இதனைத் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் வியாழக்கிழமை (அக்டோபர் 9) தெரிவித்துள்ளார்.
எல்லைப் பிரச்சினையில் சமரசம் செய்யும் நோக்கத்துடன் திரு டிரம்ப் ஈடுபடுவதை தாய்லாந்துப் பிரதமர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டதற்கு மறுநாள் இந்தக் கடித விவகாரம் வெளிவந்துள்ளது.
ஜூலை மாதம் இரு நாடுகளின் எல்லையில் ராணுவ மோதல் வெடித்ததில் 40 பேர் மாண்டதுடன், 300,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஐந்து நாள் நீடித்த தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபரின் சமரச முயற்சியினால், சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் நடக்கும் தொடர் வன்முறைகளுக்கு ஒரு நாட்டை மற்றொரு நாடு காரணம் காட்டிவருகின்றன.
கனரக ஆயுதங்கள், கண்ணி வெடிகள், இடம்பெயர்ந்த கம்போடிய மக்கள், இணைய மோசடிக்காரர்கள் போன்ற பிரச்சினைகளை எல்லைப் பகுதியிலிருந்து கம்போடியா அகற்றிவிட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தாய்லாந்துப் பிரதமர் கூறியுள்ளார். இருநாடுகளும் முறையாக வரையறுக்கப்படாத எல்லைப் பகுதிகளை சொந்தம் கொண்டாடுகின்றன.