பேங்காக்: தாய்லாந்தின் சுய ஆட்சி முறைக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் உயர்நிலை நடவடிக்கை எடுக்கத் தாங்கள் தயாராய் இருப்பதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
தாய்லாந்து ராணுவம் கூறியிருப்பது, தாய்லாந்து-கம்போடிய எல்லையில் பிரச்சினை வெடித்த பிறகு வெளியிடப்பட்டிருக்கும் ஆகக் கடுமையான எச்சரிக்கையாகும். இரு தரப்புக்கும் இடையே சென்ற வாரம் பூசல் மீண்டும் மோசமடைந்தது.
இருநாட்டு எல்லைப் பகுதியில் கம்போடிய ராணுவம் மேம்பட்ட தயார்நிலையில் இருப்பதாகத் தங்களுக்குக் கிடைத்த உளவுத்துறைத் தகவல்களில் தெரியவந்துள்ளதாக தாய்லாந்து ராணுவம் வியாழக்கிழமை (ஜூன் 5) அறிக்கையில் தெரிவித்தது. பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தாலும் கம்போடிய ராணுவம் குறித்த உளவுத்துறைத் தகவல் கவலை தரும் ஒன்று என்றும் தாய்லாந்து ராணுவம் குறிப்பிட்டது.
ராணுவ அறிக்கை வெளியிடப்படுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் தாய்லாந்து அரசாங்கம் நேர்மாறான வகையில் கருத்துரைத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நடப்பில் இருக்கும் சம்பந்தப்பட்ட இரு தரப்பு வழிகள் வாயிலாக ஆக்ககரமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு தாய்லாந்து அரசாங்கம் முன்னதாகக் கம்போடியாவைக் கேட்டுக்கொண்டது.
“எங்கள் சுய ஆட்சி முறைக்குப் பங்கம் ஏற்பட்டால் அதற்குப் பதிலடி தரத் தேவையான உயர்நிலை ராணுவ நடவைடிக்கையை மேற்கொள்ள ராணுவம் தயாராய் இருக்கிறது,” என்று தாய்லாந்து ராணுவம், ஆக உயரிய பதவியில் இருக்கும் அதன் அதிகாரிகள் சந்திப்பு நடத்துவதற்கு முன்பு எடுத்துரைத்தது. அந்தச் சந்திப்பை வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
“இரு தரப்புக்கும் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் எல்லைப் பகுதியில் உள்ள படைகள் பாதுகாப்பான, அமைதியான முறையில் செயல்பட்டிருக்கின்றன.
“அதேவேளை, தேவைப்பட்டால் நாட்டின் சுய ஆட்சி முறையை முழுமையாகத் தற்காக்கத் தயாராய் உள்ளோம்,” என்றும் தாய்லாந்து ராணுவம் குறிப்பிட்டது.
இதற்கு கம்போடிய அரசாங்கம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஃபியூ தாய் கட்சியின் தலைமையிலான தாய்லாந்து அரசாங்கம், சரிவை எதிர்நோக்கும் தாய்லாந்துப் பொருளியலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கம்போடிய எல்லைப் பிரச்சினை தலைதூக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.