தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டை நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு

3 mins read
632a8b73-8ed9-4d76-b0df-85805c4d3891
இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த இரண்டு நாள் பூசல், எல்லையில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பேங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியத் துருப்புக்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்த அச்சம் காரணமாக, 1,000க்கும் மேற்பட்ட கம்போடிய ஊழியர்கள் வீடு திரும்புவதற்காக பான் க்ளோங் லூக் எல்லை சோதனைச் சாவடியில் குவிந்துள்ளனர்.

ஜூலை 26 அன்று, சா கேயோ மாகாணத்தின் ஆரண்யபிரதேத் மாவட்டத்தில் உள்ள பான் க்ளோங் லூக் எல்லை சோதனைச் சாவடியில் 1,000க்கும் மேற்பட்ட கம்போடிய ஊழியர்கள் கூடினர். தாய்லாந்து மற்றும் கம்போடியப் படைகளுக்கு இடையே நடந்து வரும் எல்லை மோதல்கள் காரணமாக அவர்கள் கம்போடியாவுக்குத் திரும்பத் தயாராகி வந்தனர். ஊழியர்கள் பலர், தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளுடன், சோதனைச் சாவடியில் உள்ள பயணிகள் முனையத்தின் நுழைவாயிலை நிரப்பினர்.

தாய்லாந்தில் பெரும்பாலும் பணிபுரியும் ஊழியர்கள், தாய்லாந்து, கம்போடியப் படைகளுக்கு இடையிலான சண்டையிலிருந்து உருவான அச்சங்களை மேற்கோள் காட்டினர். கூடுதலாக, தாய்லாந்து தீவிரவாதக் குழுக்கள் கம்போடியர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக சமூக ஊடக வதந்திகள் பரவின. இது அவர்களின் பதற்றத்தை அதிகரித்தது.

இதற்கிடையே, தாய்லாந்துடனான சண்டையை உடனடியாக நிறுத்த கம்போடியா அழைப்பு விடுத்துள்ளது. கம்போடியாவின் ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான தூதர் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகப் பூசல் நிலவி வருகிறது. இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 33 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

பூசல் போராக மாறுவதற்குள் தற்போது கம்போடியா அமைதிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல் தாய்லாந்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது.

பல ஆண்டுகளாகத் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

போர் விமானங்கள், ராணுவ பீரங்கிகள், ஏவுகணைகள் எனப் பூசல் போரை நோக்கிச் சென்றது. இதையடுத்து ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றம் உடனடியாக அவசரக் கூட்டத்தை நடத்தியது. அதில் தாய்லாந்து மற்றும் கம்போடிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

“உடனடியாகச் சண்டை நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும், அமைதியான முறையில் இந்தப் பூசலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்,” என்று கம்போடியாவின் ஐக்கிய நாட்டுத் தூதர் ஹியா கியோ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த இரண்டு நாள் பூசல் எல்லையில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தாய்லாந்து எல்லையில் வாழும் 138,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்தச் சண்டையில் தாய்லாந்தைச் சேர்ந்த 15 பேர் மாண்டனர். அவர்களில் 14 பேர் பொதுமக்கள், ஒருவர் ராணுவ வீரர். மேலும் 46 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை (ஜூலை 25) பிற்பகல் முதல் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் தணியத் தொடங்கியது.

“நாங்கள் கம்போடியாவுடன் பேசத் தயார், அரசதந்திர முறையிலோ அல்லது ஆசியான் கூட்டமைப்பின் தலைமையில் உள்ள மலேசியாவின் முன்னிலையிலோ அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தத் தயார்,” என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்