நோம் பென்: தாய்லாந்து ராணுவம் எல்லை நகரான பொய்ப்பெட்டில் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கம்போடியா தெரிவித்திருக்கிறது.
இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சூதாட்டத்துக்குப் பெயர் பெற்ற அந்நகரம். வியாழக்கிழமை (டிசம்பர் 18) காலை 11 மணியளவில் தாய்லாந்து ராணுவம் இரண்டு வெடிகுண்டை வீசியதாகக் கம்போடியத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
இந்நிலையில், இரு நாட்டுக்கும் இடையே மீண்டும் தலைதூக்கியிருக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருமாறு உலக நாடுகள் நெருக்குதல் அளிக்கின்றன.
தாக்குதல் குறித்துத் தாய்லாந்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இம்மாதம் மூண்ட சண்டையில், தாய்லாந்தில் 21 பேர் மாண்டதாகவும் கம்போடியாவில் 17 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஏறக்குறைய 800,000 பேர் இடம் மாற நேரிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இரு நாட்டுக்கும் இடையிலான 800 கிலோமீட்டர் எல்லைப் பகுதியில் நீண்டகாலமாகவே சர்ச்சை நிலவுகிறது.
அண்மைச் சண்டைக்கு இரு தரப்பும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சூதாடுவதற்காகத் தாய்லாந்து நாட்டவர் பொய்ப்பெட்டிற்குச் செல்வது வழக்கம். கம்போடியா எல்லைப் பகுதியை மூடியதால், பொய்ப்பெட்டில் தனது குடிமக்களில் 5,000 முதல் 6,000 பேர் வரை சிக்கியிருப்பதாகத் தாய்லாந்து தெரிவித்தது.
தற்போதைய மோதலில் பொதுமக்களுக்கு ஆபத்தைக் குறைக்க எல்லைப் பகுதியை மூடுவது தேவையான நடவடிக்கைகளில் ஒன்று எனக் கம்போடியாவின் உள்துறை அமைச்சு குறிப்பிட்டது. நாட்டுக்குத் திரும்ப விரும்புவோர், விமானச் சேவையை நாடலாம் என்றும் அது சொன்னது.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் ஜூலை மாதம் தொடங்கிய சண்டையை நிறுத்த மலேசியா, அமெரிக்கா, சீனா முதலியவை உதவின.
சிறிது காலம் அமைதியாக இருந்த இரு நாட்டு எல்லைப் பகுதியில் இப்போது மீண்டும் சண்டை மூண்டுள்ளது.

