நோம்பென்: மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பட்டியலிலிருந்து வெளியேறுவதற்கு 2027ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2029ஆம் ஆண்டைக் கம்போடியா தேர்ந்தெடுத்துள்ளது.
அனைத்துலகச் சந்தைகளில் போட்டியிடும் அளவுக்கு அந்நாட்டின் பொருளியல் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகப் பிரதமர் ஹுன் மனெட் நவம்பர் 27ஆம் தேதி தலைநகர் நொம்பென்னில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
பட்டியலில் 55 ஆண்டுகள் இருந்த பிறகு, தென்கிழக்காசியாவிலிருந்து அந்நிலையைக் கடந்து வெளியேறிய முதல் நாடாக நவம்பர் 24ஆம் தேதி கம்போடியாவின் அண்டை நாடான லாவோஸ் உருவெடுத்தது.
இதனையடுத்து, ஐநா அளவுகோல்களைப் பூர்த்தி செய்திருந்தும் கம்போடியா ஏன் காத்திருக்கிறது என்ற விவாதம் உள்நாட்டில் எழுந்தது.
முன்னாள் பிரதமரும் தற்போதைய செனட் சபைத் தலைவருமான ஹுன் சென், தாம் பதவியில் இருந்தபோது இதனைத் தாமதப்படுத்தியதற்குத் தனிப்பட்ட பொறுப்பேற்பதாக நவம்பர் 26ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
வணிக வட்டி விகிதங்களில் கடன் வாங்க நேரிட்டால் கம்போடியாவுக்குக் கடுமையான கடன் சுமை ஏற்படும் என்பதால், குறைந்த வட்டிக் கடன்களைத் தொடர்ந்து பெறுவதற்காகவே இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கினார்.
உறுதியாக நிற்க முடியாவிட்டால் ஓட முயலக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐநா வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் மதிப்பீட்டின்படி, பட்டியலிலிருந்து வெளியேறிய பிறகு ஜப்பான், தென்கொரியாவிடமிருந்து பெறும் புதிய சலுகைக் கடன்களுக்குக் கம்போடியா சற்று அதிக வட்டி செலுத்த நேரிடலாம்.
ஆசிய வளர்ச்சி வங்கி ஒவ்வொரு கோரிக்கையின் அடிப்படையில் கடன் விதிமுறைகளை மதிப்பிடும்.
கம்போடியா 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் தனிநபர் வருமானம், சுகாதாரமும் கல்வியும், பொருளியல், சுற்றுச்சூழல் அதிர்ச்சிகளால் பாதிக்கப்படும் தன்மை ஆகிய ஐநாவின் மூன்று அளவுகோல்களையும் பூர்த்தி செய்தது.
கம்போடியா கோரிய ஐந்தாண்டு அவகாசத்தை ஏற்று, 2029 டிசம்பர் 19ஆம் தேதியை பட்டியலில் இருந்து வெளியேறும் நாளாக ஐநா பொதுச் சபை நிர்ணயித்துள்ளது.
அந்நிலையைக் கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுதங்கள் தவிர்த்த பிற பொருள்களுக்கான வரியில்லா வணிகச் சலுகைகள் கம்போடிய ஏற்றுமதியாளர்களுக்கு முடிவுக்கு வரும்.
