நோம் பென்: தாய்லாந்து-கம்போடியா எல்லைப் போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த பேச்சுவார்த்தையைக் கோலாலம்பூரில் நடத்துமாறு தாய்லாந்தைக் கம்போடியத் தற்காப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தகவல்கள் டிசம்பர் 23ஆம் தேதி, தான் கண்ட கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முந்தைய சண்டை நிறுத்த உடன்படிக்கையை முறியடித்த தாய்லாந்தும் கம்போடியாவும் மீண்டும் டிசம்பரில் மோத ஆரம்பித்தன.
தாய்லாந்தைச் சேர்ந்த 23 பேரும் கம்போடியாவைச் சேர்ந்த 21 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் இரு தரப்பிலும் கிட்டத்தட்ட 900,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி கோலாலம்பூரில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ கலந்துகொண்டார்.
கம்போடியாவுடன் சண்டை நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்த தாய்லாந்து தயாராக இருப்பதாகக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மேலும், தாய்லாந்தின் சாந்தபுரி மாநிலத்தின் எல்லைப் பகுதியில் டிசம்பர் 24ஆம் தேதியன்று இரு நாடுகளின் பொது எல்லைக் குழுவைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த அவர் முன்மொழிந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இருதரப்புப் பேச்சுவார்த்தையைக் கோலாலம்பூரில் நடத்துமாறு டிசம்பர் 22ஆம் தேதி எழுதிய கடிதத்தில் தாய்லாந்திடம் கம்போடியா கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், எல்லையில் நடந்துவரும் தொடர் சண்டையால் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தச் சந்திப்பை நடுநிலையான இடத்தில் நடத்த வேண்டும் எனக் கம்போடியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் டீ சேஹா தாய்லாந்து தற்காப்பு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்தார்.
அக்கடிதத்தை ஏஎஃப்பி டிசம்பர் 23ஆம் தேதி பார்த்ததாகவும் தகவலைச் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் கேட்டு உறுதிப்படுத்தி கொண்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
பேச்சுவார்த்தையைத் தலைமையேற்று நடத்த மலேசியாவும் தயாராக இருப்பதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.

