தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேச்சுவார்த்தையைத் தொடங்கிய கம்போடியா, தாய்லாந்து

2 mins read
4a0f27de-a0e8-44be-b6a3-40dde6799286
ஆசியான் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் மலேசியா இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உதவுகிறது. மாநாட்டில் பேசும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மலேசியாவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) பேச்சுவார்த்தையைத் தொடங்கினர்.

அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியதை மலேசிய தற்காப்பு அமைச்சும் உறுதிசெய்தது.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைப் பதற்றத்தைத் தீர்க்க இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்று நம்பப்படுகிறது.

அண்மையில் தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே சில நாள்கள் சண்டை மூண்டது.

இந்தச் சண்டை முழுமையான போராக மாறுவதற்கு முன்னர் அது நிறுத்தப்பட்டது. இருப்பினும் அதில் 40க்கும் அதிகமானோர் மாண்டனர். இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் அழைப்பு விடுத்தன.

பதற்றமான சூழ்நிலை என்பதால் அமைதிப் பேச்சுவார்த்தையைப் பொதுவான நாட்டில் நடத்த வேண்டும் என்று தாய்லாந்து கோரிக்கை வைத்தது. அதையடுத்து பேச்சுவார்த்தை மலேசியாவில் நடக்கிறது.

ஆசியான் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் மலேசியா இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உதவுகிறது.

முதலில் பேச்சுவார்த்தை ஒரு நாள் மட்டும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் தாய்லாந்தின் கோரிக்கையை ஏற்று அது நான்கு நாள்களாகக் அதிகரிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையின் கடைசி நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி இரு நாட்டு தற்காப்பு அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள். மேலும் மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உயர் அதிகாரிகளும் அக்கூட்டத்தில் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தை எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இரு நாடுகளுக்கும் நல்ல வாய்ப்பை அளிக்கும் என்று தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எல்லையில் தாய்லாந்து புதிதாகத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) கம்போடிய தற்காப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியது.

இருப்பினும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) இரு நாட்டு எல்லைகளிலும் எந்தவிதப் பூசலும் இல்லை.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே எல்லைப் பிரச்சினை உள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீராக இருந்தது. ஆனால் அது கடந்த மாத பூசலுக்குப்பின் முடிவுக்கு வந்தது.

குறிப்புச் சொற்கள்