தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டைநிறுத்தம் குறித்துப் பரிசீலிக்க கம்போடியா, தாய்லாந்து தயார்: அன்வார்

2 mins read
38c3a98f-f737-4505-913b-cf3b8ff23ce3
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப்படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: கம்போடியாவும் தாய்லாந்தும் சண்டைநிறுத்தம் குறித்துப் பரிசீலிக்கத் தயாராய் இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை (ஜூலை 24) ஃபேஸ்புக் பதிவில் திரு அன்வார் இதனைக் குறிப்பிட்டார்.

கம்போடிய-தாய்லாந்து எல்லைப் பகுதியில் நிலவிய பதற்றம் வியாழக்கிழமை பெரிய அளவில் மோசமடைந்தது. இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், தாய்லாந்து, கம்போடியத் தலைவர்களுடன் தாம் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் பூசலைக் கட்டுப்படுத்துமாறு அவர்களிடம் தாம் கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.

“கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் ஃபும்தாம் வெச்சாயாச்சாய் இருவருடனும் நான் இன்று (வியாழக்கிழமை) மாலை பேசினேன். அந்நாடுகளின் எல்லைப் பகுதியில் பதற்றநிலை மோசமடைந்தது குறித்து மலேசியா மிகுந்த கவலை கொண்டுள்ளதை அவர்களிடம் தெரிவித்தேன்.

“மலேசியா, இவ்வாண்டுக்கான ஆசியான் கூட்டமைப்பு தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கும் நாடு என்ற முறையில் இடம்பெற்ற உரையாடல்களில் எதிர்ப்புணர்வு மேலும் மோசமடையாமல் இருக்கவும் அமைதியான பேச்சுவார்த்தை, அரசதந்திர ரீதியாகத் தீர்வுகாணுதல் ஆகியவற்றுக்கு வழிவிடவும் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இரு தலைவர்களிடமும் நேரடியாகக் கோரிக்கை விடுத்தேன்.

“இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவது குறித்து ஆலோசிக்க பேங்காக்கும் நோம்பென்னும் தயாராய் இருப்பதை நான் வரவேற்கிறேன். அதற்காக, ஆசியான் கூட்டமைப்பு ஒன்றுபட்டிருக்க அனைத்துத் தரப்புக்கும் பொறுப்புள்ளது என்ற முறையிலும் ஆதரவளித்து உதவிக்கரம் நீட்ட மலேசியா தயாராய் இருக்கிறது,” என்றார் திரு அன்வார். ஆசியானின் ஒருமைப்பாடுதான் அதன் பலம் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் அமைதிதான் இவ்வட்டாரத்தின் மாறாத, ஒருமித்த விருப்பமாக எப்போதும் இருக்க வேண்டும் என்றும் அவர் விவரித்தார்.

இதற்கிடையே, ஐக்கிய நாட்டுச் சபையின் பாதுகாப்பு மன்றம், கம்போடிய-தாய்லாந்து பூசல் குறித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அவசர சந்திப்பு நடத்தவுள்ளது.

குறிப்புச் சொற்கள்