ஒட்டாவா: கனடாவின் பொதுத் தேர்தல் ஏப்ரல் 28ல் நடைபெறுகிறது.
இதில் சீனாவும் இந்தியாவும் குறுக்கிடக்கூடும் என்று கனடாவின் உளவுத்துறை திங்கட்கிழமை (மார்ச் 24) எச்சரிக்கை விடுத்தது.
தேர்தலில் குறுக்கிடும் ஆற்றல் ரஷ்யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருப்பதாக அது கூறியது.
சீனாவுடனும் இந்தியாவுடனும் கனடாவின் உறவு கசப்படைந்துள்ள நிலையில், கனடிய உளவுத்துறை இவ்வாறு கருத்துரைத்துள்ளது.
இதற்கு முன்பு இதேபோன்ற குற்றச்சாட்டுகளை கனடா முன்வைத்தபோது சீனாவும் இந்தியாவும் அதை மறுத்தன.
2019, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின்போது சீனா மற்றும் இந்தியாவின் குறுக்கீட்டை எதிர்கொள்ள கனடா விரைவாகச் செயல்படவில்லை என்று கடந்த ஜனவரி மாதம் கனடிய உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சீனா மற்றும் இந்தியா குறுக்கிட்டபோதிலும் அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கனடாவுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் நாடுகள் செயற்கை நுண்ணறிவு மூலம் கனடியத் தேர்தலில் குறுக்கிடும் முறை அதிகரித்திருப்பதாக கனடிய உளவுத்துறையின் இயங்குமுறைப் பிரிவின் துணை இயக்குநர் திருவாட்டி வெனசா லோய்ட் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஜனநாயக முறைப்படி ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் கனடியப் பொதுத் தேர்தலில் சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குறுக்கிடுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது,” என்றார் திருவாட்டி லோய்ட்.
இம்மாதம், கனடிய விவசாய, உணவுப்பொருள் மீது சீனா 2.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$3.48 பில்லியன்) அதிகமான வரி விதித்தது.
2024ஆம் ஆண்டில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியப் பொருள்கள் மீது கனடாவின் வரிவிதிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின்கீழ் கனடாவைச் சேர்ந்த நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீனா கடந்த வாரம் நிறைவேற்றியதாக கனடா தெரிவித்தது.
இதற்குக் கனடா கடும் கண்டனம் தெரிவித்தது.
கனடாவில் வசித்து வந்த சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியா செயல்பட்டு வருவதைக் கண்டித்து 2024ஆம் ஆண்டில் இந்திய அரசதந்திரிகள் அறுவரை கனடா வெளியேற்றியது.

