டிரம்ப் நிர்வாகத்துடன் உறவு வளர்க்க கனடியப் பிரிவினைவாதிகள் மும்முரம்

டிரம்ப் நிர்வாகத்துடன் உறவு வளர்க்க கனடியப் பிரிவினைவாதிகள் மும்முரம்

2 mins read
0f4c753e-e7e5-478b-aaa3-de514d0681aa
சுய நாடாகத் திகழ ஆல்பர்ட்டா விருப்பம் - படம்: ராய்ட்டர்ஸ்

கால்கரி: கனடாவின் மற்ற பகுதிகளால் தங்கள் பொருளியல் முடக்கப்படுவதாக நீண்டகாலமாகக் குறைகூறி வரும் அந்நாட்டின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில், சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்தும் நோக்கில் பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கனடாவிலிருந்து பிரிவதற்கான மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு, அம்மாநிலத்தின் பதிவுபெற்ற வாக்காளர்களில் 10 விழுக்காட்டினரின் ஆதரவு தேவை. அந்த வகையில், மே 2ஆம் தேதிக்குள் அதற்கான குறைந்தபட்ச எண்ணிக்கையான 177,000 கையெழுத்துகளைத் திரட்டத் தொண்டூழியர்கள் நம்புகின்றனர்.

இதன்மூலம் ஆல்பர்ட்டா சுதந்திர நாடாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், பிரதமர் மார்க் கார்னியின் முயற்சிகளுக்கு இந்தப் பிரசாரம் ஒரு சவாலாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதிக்கும் தீர்வைகள் மற்றும் கனடாவைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு இடையே, நாட்டை ஒருங்கிணைத்துச் செயல்படும் பிரதமரின் முயற்சிகளுக்கு இது முட்டுக்கட்டையாக உள்ளது.

ராக்கி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ‘ஹை ரிவர்’ (High River) நகரில், அண்மைய வியாழக்கிழமை காலை அமைதியான ஒரு கடைத்தொகுதிக்கு வந்த குடியிருப்பாளர்கள் சிலர், சுதந்திரத்திற்கான அந்த மனுவில் கையெழுத்திட்டனர்.

திரு டிரம்ப் மீது சிலர் தனிப்பட்ட முறையில் பற்றுணர்ச்சியைத் தெரிவித்தபோதிலும், அமெரிக்காவுடன் இணைவது தங்கள் நோக்கமல்ல என்றும், ஆல்பர்ட்டா தனி நாடாக வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் பெரும்பாலானோர் கூறினர்.

சுதந்திர ஆல்பர்ட்டா குறித்து அமெரிக்க நிர்வாகத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள தாமும் மற்ற செயல்பாட்டாளர்களும் கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்ததாக ஆல்பர்ட்டா சுதந்திர ஆதரவுக்குழு ஒன்றின் தலைவர் திரு ஜெஃப் ராத் உறுதிப்படுத்தினார்.

ஆல்பர்ட்டாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புதிய எண்ணெய் குழாய் அமைக்கும் யோசனையைத் தாம் முன்வைத்ததாகத் திரு ராத் கூறினார். சீனாவுக்குக் கூடுதல் வளங்களை விற்கும் ஒட்டாவாவின் (Ottawa) திட்டங்கள் குறித்த தங்களது கவலையைச் சுட்டிக்காட்டிய அமெரிக்க அதிகாரிகள், இந்த யோசனைக்குச் சாதகமாகப் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்