பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து; மேல்முறையீட்டுக்கு முயற்சி

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து; மேல்முறையீட்டுக்கு முயற்சி

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 6:56 pm

2 mins read

புத்ராஜெயா: பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியின் பதிவை மலேசியச் சங்கங்களின் பதிவாளர் ரத்து செய்துள்ளார்.

பதிவை ரத்து செய்வதற்கான காரணங்களை விளக்கி அறிக்கை அனுப்பப்பட்டிருந்த வேளையில், கூட்டணி சமர்ப்பித்த விளக்கங்கள் அந்தக் காரணங்களை மறுக்கத் தவறின.

அதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் பதிவு செய்ய நீக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களையும் விளக்கங்களையும் ஆய்வு செய்ததாகவும் சங்கங்களின் பதிவாளர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“பெரிக்காத்தான் கூட்டணி அளித்த காரணங்கள் அதன் பதிவைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வலுவான நியாயத்தை வழங்கவில்லை.

“அதன் அடிப்படையில், 1966ஆம் ஆண்டின் சங்கங்கள் சட்டத்தின் பிரிவுகளுக்கு இணங்க பதிவை ரத்து செய்யச் சங்கங்களின் பதிவாளர் முடிவெடுத்துள்ளார்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 22ஆம் தேதியிட்ட அறிக்கை ஒன்றை அந்தக் கூட்டணிக்கு அனுப்பியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து விளக்கமும் முறையீடும் சமர்ப்பிக்க அதற்கு வாய்ப்பளித்ததாகவும் பதிவாளரின் அறிக்கை கூறுகிறது.

அதனைத் தொடர்ந்து பெரிக்காத்தான் கூட்டணி அக்டோபர் 12ஆம் தேதி அதற்குப் பதிலளித்தது.

பதிவுசெய்யப்பட்ட ஒவ்வோர் அமைப்பும் 1966ஆம் ஆண்டின் சங்கங்கள் சட்டத்தின் விதிகளுக்கும் அதன் அரசியலமைப்புக்கும் கீழ்ப்படிந்து நடப்பதை உறுதிசெய்யப் பொறுப்பேற்க வேண்டும் என்று பதிவாளர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பதிவு நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூட்டணி உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் பிஎன் தலைமைச் செயலாளர் தக்கியுதீன் ஹஸன் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியின் பிரதிநிதியுமான அவர், கூட்டணியில் உள்ள கட்சிகள் மலாக்கா சட்டமன்றத் தேர்தலுக்கு எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

இதற்கிடையே, கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பது பெர்சத்து கட்சி அளித்த புகார் சரியானது என்பதைக் காட்டுவதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்குரிய அரசியலமைப்பின்கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பெரிகாத்தான் நேஷனல் தலைமை மறுத்ததாகவும் அது சங்கங்கள் சட்டத்தை மீறும் செயல் என்றும் ஆகஸ்ட் மாதம் சங்கங்களின் பதிவாளரிடம் பெர்சத்து கட்சியினர் விளக்கிக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
கூட்டணிமலேசியாபதிவு