வாஷிங்டன்: அமெரிக்காவில் விற்கப்படும் தனது பானங்களில் கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையைப் பயன்படுத்த கோக்க கோலா (Coca-Cola) நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கோக்க கோலா நிறுவனத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அந்நிறுவனம் இதற்கு ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“அமெரிக்காவில் விற்கப்படும் பானங்களில் உண்மையான கரும்புச் சர்க்கரையைப் பயன்படுத்துவது குறித்து நான் கோக்க கோலாவிடம் பேசியிருக்கிறேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். கோக்க கோலாவில் அதிகாரத்தில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திரு டிரம்ப், ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கோக்க கோலா பானங்களுக்குப் பொதுவாக சோளச் சாறு மூலம் இனிப்பு சேர்க்கப்படுகிறது. சில நாடுகளில் அந்நிறுவனம் கரும்புச் சர்க்கரையைப் பயன்படுத்துகிறது.
டிரம்ப் அரசாங்கத்தின் ‘மறுபடியும் அமெரிக்காவை ஆரோக்கியமாக ஆக்குவோம்’ (MAHA) திட்டத்தின்கீழ் செயற்கை சாயங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்குமாறு உணவு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இத்திட்டம், அமெரிக்க சுகாதார அமைச்சர் ராபர்ட் எஃப் கென்னடியின் இலக்குகளைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது.
திரு கென்னடி, அமெரிக்கர்கள் பொதுவாக உட்கொள்ளும் சர்க்கரை அளவையும் கண்டித்துப் பேசியிருக்கிறார்.
ஃபிரக்டோஸ் (Fructose) அளவு அதிகமாக இருக்கும் சோளச் சாறு, உடல் பருமனால் சிறார் பாதிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவிடக்கூடும் என்று ‘மறுபடியும் அமெரிக்காவை ஆரோக்கியமாக ஆக்குங்கள்’ பணிக்குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. நாள்பட்ட நோய்களுக்குப் பின்னால் உள்ள அடிப்படைக் காரணங்களை அறிய திரு டிரம்ப் அக்குழுவைத் தொடங்கினார்.