தைவானில் டாக்சி மீது எதிர்த்திசையிலிருந்து வந்த கார் ஒன்று நேருக்கு நேர் மோதியதில், அதில் பயணம் செய்த மூன்று சிங்கப்பூர்ப் பயணிகள் காயமடைந்தனர்.
தைவானியச் செய்தி நிறுவனமான ‘இடி டுடே’ வெளியிட்ட தகவலின்படி, தைப்பே நகரிலிருந்து தெற்கே ஏறத்தாழ 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தைவானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான ஹுவாலியனில், நவம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் மொத்தம் ஏழு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் சென்ற சிங்கப்பூரர்கள் மூவருடன் அவர்களது குடும்பத்தினர், டாக்சி ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோதலின் தீவிரத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்ததுடன், இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. காரின் முன் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கைகளில் வைத்திருந்த பெண் ஒருவர் முன்பக்கக் கண்ணாடி உடைந்ததில் காரை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டார்.
விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய தைவானியக் காவல்துறை, இரு வாகன ஓட்டுநர்களும் மது அருந்தியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
