ஜகார்த்தா / கோலாலம்பூர்: சுமாத்ரா, போர்னியோ தீவுகளில் உள்ள காடுகளிலும் கரி மண் நிறைந்த நிலங்களிலும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் இந்தோனீசியாவில் கரிம உமிழ்வு உலகிலேயே உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்புச் சேவையான ‘கோபர்நிகஸ்’ தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலான காலத்தில், இந்தோனீசியாவின் காட்டுத்தீயினால் வெளியேற்றப்பட்டக் கரிம உமிழ்வு 19.7 மில்லியன் மெட்ரிக் டன் அளவை எட்டியுள்ளது.
இது, இந்த வாரத்தில் ரஷ்யாவின் அளவை முந்தியதுடன், உலகளாவிய மொத்தக் கரிம உமிழ்வில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானது. ‘சூப்பர் எல் நினோ’ பருவநிலை காரணமாக எழுந்துள்ள கடும் வறட்சியும் அதிக வெப்பமும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத இந்த மிக மோசமான நிலைக்குக் காரணம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, மேற்குக் கலிமந்தானின் பொந்தியானாக் நகரில் காற்றின் மாசு தரக் குறியீடு ஆபத்தான அளவைக் கடந்து 394 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தோனிசியாவுக்கு உதவத் தயாராக உள்ளோம்: மலேசியா
இதனிடையே, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தி எல்லை தாண்டிய அடர் புகைமூட்டத்தைச் சமாளிக்க இந்தோனீசியாவிற்கு உதவத் தயார் நிலையில் இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய மலேசியத் தொடர்புத்துறை அமைச்சரான ஃபஹ்மி ஃபாட்சில், மலேசிய தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை, வெளியுறவு அமைச்சின் வசம் உள்ள மீட்பு உதவிகள் குறித்த விவரங்கள் இந்தோனீசிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தோனீசியாவின் பதிலுக்காகக் காத்திருப்பதாக அவர் சொன்னார்.
எல்லை தாண்டிய இந்த புகைமூட்டப் பிரச்சினை பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதால், அதனைத் தடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆசியான் அமைப்பில் உள்ள நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

