ஒட்டாவா: கனடியப் பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.
கனடாவிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) தமது பயணத்தைத் தொடங்கும் அவர், சீனாவுடன் தடையற்ற வர்த்தகம், அனைத்துலகப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்லுறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகக் கனடியப் பிரதமர் சீனா செல்வது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் கனடியப் பிரதமர் இவர்தான்.
சீனாவுடன் புதிய வர்த்தக உடன்பாட்டையும் பாதுகாப்புப் பங்காளித்துவத்தையும் கனடா எதிர்பார்ப்பதால் அவ்விரு நாடுகளின் உறவில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம், தென் கொரியாவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை கார்னி சந்தித்தார். அப்போது, சீன அதிபரின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் செல்ல கார்னி ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, தற்போது பேச்சுவார்த்தை நிலையில் இருக்கும் பல ஒப்பந்தங்களில் கார்னி கையெழுத்திடுவார் எனக் கனடிய மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கனடாவை ஆளும் ‘லிபரல்’ கட்சி அமைச்சரவையின் முன்னாள் மூத்த ஆலோசகரான கிரெக் மெக்ஈச்சர்ன், இந்தப் பயணம் நல்லுறவை மீட்டெடுப்பதற்கான பயணமாக மட்டுமன்றி, கனடாவுக்கு உறுதியான பலன்களை அளிக்கும் பயணமாக இருக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
மேலும், கனடியப் பிரதமரின் சீனப் பயணத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனிக்கும் எனக் குறிப்பிட்டார்.

