நியூயார்க்: ஆபாச பட நடிகைக்கு பணம் தந்த வழக்கில் டோனல்ட் டிரம்ப் தண்டிக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் சிறைத் தண்டனையோ, அபராதமோ இருக்காது என்று நீதிபதி ஒருவர் ஜனவரி 3ஆம் தேதி கோடி காட்டியிருக்கிறார். இந்த வழக்கில் ஜனவரி 10ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.
அதாவது ஜனவரி 20ஆம் தேதி அதிபர் பொறுப்பு ஏற்பதற்கு பத்து நாள்களுக்கு முன்பு டிரம்ப் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிபதி ஜுவான் மெர்சன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு முன்னாள் அதிபர் அல்லது இந்நாள் அதிபர் மீது குற்றம்சாட்டப்படவில்லை அல்லது தண்டனை வழங்கப்படவில்லை.
திரு டிரம்ப், 78, தண்டனை விதிக்கப்படும் நாளில் நேரடியாகவோ அல்லது காணொளி வழியாகவோ முன்னிலையாகலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.
அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க விரும்பவில்லை என்றும் நிபந்தனையில்லாமல் அவரை விடுவிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் திரு டிரம்பிற்கு சிறைத்தண்டனை மட்டுமல்லாமல் அபராதமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திரு டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்படக்கூடாது என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தம்முடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்காக ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு டோனல்ட் டிரம்பு பணம் தந்தார் என்று சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை, அதிபர் தேர்தல் வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, இது பொய் வழக்கு என்பதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் சமூக ஊடகப் பதிவில் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.