பேங்காக்: வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாய்லாந்தையும் மியன்மாரையும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாதித்தது. இதனால் அவ்விரு நாடுகளும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில், தாய்லாந்தின் பணப் பரிவர்த்தனை கட்டமைப்புகளும் அவை சார்ந்த சேவைகளும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி திங்கட்கிழமை (மார்ச் 31) தெரிவித்தது.
நிதி நிறுவனங்கள் அவர்களின் வழக்கமான சேவைகளைத் தடையில்லாமல் தொடரலாம் என்றும் நிலநடுக்கத்தால் கட்டமைப்பில் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு பின்பு மீண்டதாக அது குறிப்பிட்டது.
இதற்கிடையே தாய்லாந்தின் வர்த்தகச் சம்மேளனம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகள் எந்த தடையும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
மேலும் தாய்லாந்து-மியன்மார் எல்லையிலும் வர்த்தக நடவடிக்கைகள் எப்போதும் போல் நடப்பதாக அது கூறியது.
பெரும்பாலான துறைகளின் தினசரி நடவடிக்கைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை. முக்கியமான உற்பத்திகள் தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன என்று தாய்லாந்தின் வர்த்தகச் சம்மேளனம் சொன்னது.
இதற்கிடையே தாய்லாந்துப் பங்குச் சந்தையும் எப்போதும் போல் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 28) பிற்பகல் முதல் தாய்லாந்துப் பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. திங்கட்கிழமை (மார்ச் 31) அது திறக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிலநடுக்கத்தால் தாய்லாந்தின் பல கட்டடங்கள் சேதமாகின. கட்டடங்களுக்குக் காப்பீடு இருக்கும் என்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் பெரிய அளவிலான செலவுகளுக்கு நிதி வழங்க நேரிடும்.
காப்பீட்டு நிறுவனங்களின் நிதி நிலைமை நன்றாக உள்ளது. அதனால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டடங்களுக்கு நிதி உதவி வழங்குவதில் சிக்கல் இருக்காது என்று காப்பீட்டு ஆணைய அலுவலகம் தெரிவித்தது.

