சூதாட்டக்கூடங்கள் தாய்லாந்துச் சுற்றுப்பயணத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்: அகோடா

2 mins read
f75aa6e0-3c72-4494-a1ef-660a991d662d
தாய்லாந்தில் சில வகையான சூதாட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: சூதாட்டக்கூடங்களும் அது தொடர்பான ஈர்ப்பிடங்களும் தாய்லாந்திற்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.

ஆசியாவை மையமாகக் கொண்டுள்ள இணையப் பயண முகவையான ‘அகோடா’வின் முன்னணி நிர்வாகி அவ்வாறு கூறியுள்ளார்.

தாய்லாந்து அதன் முதல் பெரிய அளவிலான கேளிக்கை வளாகத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. அந்த வளாகத்தில் சூதாட்டக்கூடம் ஒன்று அமைந்திருக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிகமான சுற்றுப்பயணிகளையும் முதலீடுகளையும் கொண்டுவருவதுமே அந்நாட்டின் நோக்கம்.

“சூதாட்டத்தைச் சுற்றியுள்ள அனுபவம் - மக்காவ், வேகஸ் ஆகியவற்றைப் பாருங்கள். அங்கு நிகழ்ச்சிகள், உணவு, அற்புதமான ஹோட்டல்கள் ஆகியவை இருக்கும்,” என்று அகோடாவின் தலைமை நிர்வாகி ஒம்ரி மோர்கன்ஷ்டர்ன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

சிங்கப்பூரின் மரினா பே சேண்ட்சைச் சுட்டிக்காட்டிய அவர், கேளிக்கைப் பூங்காக்கள், அரும்பொருளகங்கள், குழந்தைகளுக்கான நடவடிக்கைகள் ஆகியவையும் முக்கியம் என்று கூறினார்.

சூதாட்டக் கூடங்களுக்குப் பருவ காலங்கள் கிடையாது என்றும் குறைவான வெளிநாட்டவர் செல்லும் காலகட்டத்தில் அவை வெளிநாட்டினர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவலாம் என்றும் அவர் சொன்னார்.

தாய்லாந்துப் பொருளியலுக்கு மிக முக்கிய உந்துதலாக உள்ளது சுற்றுப்பயணம். இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில், சென்ற ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 29 விழுக்காட்டு வெளிநாட்டவர்கள் அங்குச் சென்றுள்ளனர்.

தாய்லாந்தில், அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள குதிரைப் பந்தயங்கள், அதிகாரபூர்வ ‘லாட்டரி’ போன்ற சில வகையான சூதாட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக அனுமதிப்பதற்கான முயற்சிகள் முன்னதாகத் தடைப்பட்டன.

சூதாட்டக் கூடங்களைத் திறப்பதற்கு பழைமைவாதிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்