ஹாங்காங்: கேத்தே பசிஃபிக் விமான நிறுவனம் ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளில் அதன் ஆக மலிவான பயணச்சீட்டுகளில் சிலவற்றை விற்கத் திட்டமிடுகிறது.
அது 100,000 இருவழிப் பயண எகானமி இருக்கைகளுக்கான பயணச்சீட்டுகளைப் பெரிய அளவிலான விலைக்கழிவில் விற்கிறது.
ஹாங்காங்கின் பிரதான விமான நிறுவனமான அது, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பயணம் செய்வதற்கு 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அந்தச் சலுகையை வழங்குகிறது. இரண்டு வார விற்பனை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. பயணச்சீட்டுகள் மிக விரைவில் விற்று முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் செல்லும் இருவழிப் பயணங்களுக்கான பயணச்சீட்டுகளின் விலை, வரிகளையும் கூடுதல் கட்டணங்களையும் சேர்த்து 5,538 ஹாங்காங் டாலராக (S$963) உள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் லண்டனுக்குச் செல்வதற்கான பயணச்சீட்டுகளின் தற்போதைய விலை 12,563 ஹாங்காங் டாலராக உள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்திலிருந்து விமான நிறுவனம் மீண்டுவரும் வேளையில், சுற்றுப்பயணிகள் பயணச்சீட்டுகளுக்கு அத்தகைய விலை செலுத்துவது வழக்கமாகிவிட்டது.
பேங்காக், சிங்கப்பூர், சோல், சிட்னி, டெல் அவிவ், ஆம்ஸ்டர்டாம், சிகாகோ உள்ளிட்ட இடங்களுக்குப் பயணச்சீட்டுகள் விலைக்கழிவில் விற்கப்படுகின்றன.

