ஜோகூர் பாரு: மலேசியாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் எடுத்த முடிவு, ஜோகூர் கடற்பாலத்திலும் இரண்டாம் இணைப்பிலும் அதிகப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூருக்குள் செல்லும் பல வாகனமோட்டிகள், குறிப்பாக மாலை 4 மணிக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மே 17ஆம் தேதி உலு திராம் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சோதனைகள் தொடங்கப்பட்டன.
ஞாயிறு காலையிலிருந்து சிங்கப்பூர் அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் தீவிரமாகச் சோதிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஓட்டுநர் அலி ஹசான், 57, கூறினார்.
“பொதுமக்களுக்கு நிறைய அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் ஏன் இத்தகைய சோதனைகள்? நான் ஞாயிற்றுக்கிழமையன்று ஜோகூர் கடற்பாலத்தில் நான்கு மணி நேரம் சிக்கிக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.
மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் குமார், 42, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
“மோட்டார்சைக்கிளோட்டிகள் மீதும் தீவிரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது,” என்றார் குமார்.
மே 25 முதல் ஜூன் 23 வரை வரவிருக்கும் பள்ளி விடுமுறையின்போது போக்குவரத்து நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற கவலை இருப்பதாக அவர் சொன்னார்.