போர் நிறுத்தம் முறியும் அபாயம்: தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா

போர் நிறுத்தம் முறியும் அபாயம்: தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா

1 mins read
d8eb0ab4-856a-4c67-9feb-28a188ccff02
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஹாேர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

ஈரான் அனைத்துலகச் சந்தையில் எண்ணெய் விற்பனை செய்ய வழங்கியிருந்த உரிமத்தையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தம் முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானின் சிரிக், பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏவுகணை மையங்களும் வானூர்தித் தளங்களும் குறிவைக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்குப் பாதிப்பில்லை என்றாலும், பல மீன்பிடிப் படகுகள் தீக்கிரையாகின. அண்மையில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் இறுதி ஊர்வலத்திற்காகக் கொம் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்ட நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 விழுக்காட்டுக்குமேல் உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் இறுதி உடன்படிக்கைக்கு வரவேண்டும், இல்லையெனில் அந்நாட்டின் ஆற்றல் வளங்கள் முழுமையாக அழிக்கப்படுமென மிரட்டல் விடுத்துள்ளார்.

அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று ஈரான் கூறியுள்ளது. கத்தாரின் எரிவாயுக் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரானே காரணம் எனக் கத்தார் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வளைகுடாப் பகுதியில் மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்