ஜெருசலம்: ஹமாஸுடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இவ்வாரத்தில் தமது பாதுகாப்பு அமைச்சரவையைக் கூட்ட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) இஸ்ரேல் சென்றார்.
காஸாவில் நீடிக்கும் போரை ஆக்கபூர்வமாக நிறுத்துவதற்கான திட்டம் குறித்து இஸ்ரேலிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அப்போது அவர் தெரிவித்து இருந்தார்.
ஆயினும், இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்த யோசனைகள் வேறுமாதிரியாக இருந்தன.
காஸாவில் தாக்குதலை விரிவுபடுத்துவது, அங்கு ஏற்கெனவே சிதைந்து, உருக்குலைந்துபோன பகுதிகளில் சிலவற்றை இணைப்பது ஆகியன அவர்கள் தெரிவித்த யோசனைகளில் சில.
முன்னதாக, ஜூலை 31ஆம் தேதி திரு நெட்டன்யாகுவை திரு விட்கோஃப் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் என்பதிலிருந்து விரிவான உடன்பாட்டிற்கு மாறுவதன் அடிப்படையில் அந்தப் புரிதல் ஏற்பட்டதாகச் சொன்ன அவர், போரை அடியோடு நிறுத்துவதற்கு இஸ்ரேல் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகளை உள்ளடக்கிய உடன்பாடு அது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
எல்லா பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்; ஹமாஸ் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்; அதன் பிறகு காஸாவிலிருந்து ராணுவம் வெளியேறும் என்பன இஸ்ரேலின் நிபந்தனைகள்.
போரை 60 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா தெரிவித்த யோசனையின் அடிப்படையில் கத்தார் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆலோசித்து வருகின்றன.
இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதர் இஸ்ரேலுக்கு வருகை அளித்திருப்பதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்ப்பதாக தகவலறிந்த வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

