மணிலா: கணக்கில் வராத சொத்து, பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியருக்கு எதிராகப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற புகார்களில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, துணை அதிபர் சாரா டுட்டார்ட்டேயை பதிலளிக்குமாறு பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமையன்று (மார்ச் 4) உத்தரவிட்டனர்.
பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டேயின் மகளான சாரா டுட்டார்ட்டே, 2028ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறக்கூடியவராக இருப்பதாகக் கருதப்படுகிறார்.
அந்தப் பதவிக்கு போட்டியிடப் போவதாகவும் சாரா டுட்டார்ட்டே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இதேபோன்ற ஒரு பதவி நீக்க முயற்சியை, அரசியலமைப்புப் பாதுகாப்புகளை மீறுவதாகக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
செனட் சபையில் நடைபெறும் விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், டுட்டார்ட்டே பதவியில் இருந்து நீக்கப்படுவார் மற்றும் எதிர்காலத்தில் எந்த அரசுப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவராக அறிவிக்கப்படுவார்.
2022ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றி, தற்போது பரம எதிரிகளாக மாறியுள்ள இரு செல்வாக்குமிக்க அரசியல் குடும்பங்களின் வாரிசுகளுக்கு இடையிலான கசப்பான மோதலுக்கு மத்தியில், பிரதிநிதிகள் சபையின் நீதிக்குழுவில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
டுட்டார்ட்டேயின் தற்காப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றக் குழுவின் வாக்கெடுப்பு குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
“தற்போதைக்கு, இந்த வழக்கின் சாராம்சம் குறித்து ஊடகங்களில் விவாதிப்பதைத் தவிர்த்து, முறையான அரசியலமைப்பு நடைமுறைகள் மூலம் இதற்குப் பதிலளிப்போம்,” என்று அது கூறியது.
பதவி நீக்க விசாரணை தொடரவேண்டுமா என்பது குறித்த வாக்கெடுப்புக்கு முன்னதாக, குற்றச்சாட்டுகளுக்கு சாரா டுட்டார்ட்டே அளிக்கும் பதில் (அவர் பதிலளிக்கும் பட்சத்தில்) மற்றும் புகார் செய்தோரின் மறுப்புரைகளைச் சபை பரிசீலிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
டுட்டார்ட்டேக்கு எதிரான புகார்களில் ரகசிய நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், லஞ்சம், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் அதிபர் மார்கோஸ், அவரது மனைவி மற்றும் அப்போது நாடாளுமன்றச் சபாநாயகராக இருந்த அவரது உறவினர் ஆகியோரைக் கொல்லப்போவதாகப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது ஆகியவை அடங்கும்.

