தோக்கியோ: ஜப்பானியக் கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த தனியார் துறை உறுப்பினர்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) வலியுறுத்தினர்.
மனப்பாடம் செய்வது, துல்லியமாகக் கணக்கிடுவது போன்ற பழைய முறைகளைக் கைவிட்டு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
பொருளியல், நிதிக் கொள்கைக்கான மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்தப் பரிந்துரையில், ஜப்பானியப் பள்ளிகள் தற்போது கற்பிக்கும் திறன்கள் ‘குறுகிய காலத்துக்குச் செல்லுப்படியாகக்கூடியவை’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சியால் இத்தகைய திறன்கள் விரைவில் தேவையற்றதாகிவிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கேள்விக்கான விடையைக் கண்டறிவது, ஒரே மாதிரியான பின்னணி கொண்ட மாணவர் குழுவில் அனைவருக்கும் ஒரே வேகத்தில் பாடம் நடத்துவது போன்ற ஜப்பானியக் கல்வி முறையின் தற்போதைய அணுகுமுறைகளில் செயற்கை நுண்ணறிவு மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடியது.
ஆனால், இத்தகைய திறன்கள் தற்போதைய காலத்தின் தேவைகளுக்குப் பொருந்தவில்லை என்று உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
கல்வி முறையில் நிலவும் இந்த முரண்பாடு, ஜப்பானின் தேசிய வலிமையைப் பின்னுக்குத் தள்ளுவதாக அவர்கள் கூறினர். குறிப்பாக, நாட்டின் மக்கள்தொகை வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய மனிதவளத்தை ஜப்பான் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
2050ல் நாட்டிற்குத் தேவைப்படும் திறன்கள், 2015ல் தேவைப்பட்டதைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று ஜப்பானின் பொருளியல், வர்த்தக, தொழில்துறை அமைச்சு 2022 மே மாதம் வெளியிட்டிருந்த ஆய்வு முடிவுகளையும் உறுப்பினர்கள் மேற்கோள் காட்டினர்.

