அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம்; குழப்பத்தில் மலேசிய மாணவர்கள்

அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம்; குழப்பத்தில் மலேசிய மாணவர்கள்

2 mins read
478c4a0d-419a-48ad-87b8-87c94021d6dd
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை அமெரிக்கா மாற்றியுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: கடந்த ஜூலை மாதம் அனைத்துலக மாணவர்கள் அமெரிக்காவில் தங்கக்கூடிய காலத்துக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டது.

அதனையடுத்து, மலேசிய மாணவர்களிடையே குழப்பநிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, விசாவுக்கு இறுதி அனுமதி பெற விண்ணப்பதாரர்கள் அவரவர் நாட்டில் அதைச் செய்துகொள்ளவேண்டும். அந்த வகையில், மாணவர்கள் பலர் நாடு திரும்ப பயப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அதற்குக் காரணம்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் விதித்திருக்கும் மாற்றங்களின்படி வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றுத் திட்டங்களுக்குக்கீழ் வருகை தருவோர் ஆகியோருக்கான ‘எஃப்’, ‘ஜே’ விசாக்களை வைத்திருப்போர் பொதுவாக அதிகபட்சம் நான்காண்டுகளுக்கு மட்டுமே அமெரிக்காவில் இருக்க முடியும். அதேபோல், பட்டக் கல்வியை முடித்த பிறகு அமெரிக்காவில் இருக்கக்கூடிய அதிகபட்ச காலம் 60லிருந்து 30 நாள்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, நான்காண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் தங்கவேண்டியிருக்கும் மாணவர்கள் அந்தக் காலத்தை நீட்டித்துக்கொள்ள அமெரிக்க குடியுரிமை, குடிநுழைவுச் சேவைகளிடம் விண்ணப்பிக்கவேண்டும். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான பின்னணிச் சோதனைகள் நடத்தப்படும்.

ஏற்கெனவே கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் சிக்கலை எதிர்நோக்கும் மலேசிய மாணவர்களுக்கு இந்த மாற்றங்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நம்பிக்கையுடன் இருந்து முன்னரே திட்டமிட்டுக்கொள்வதே ஆகச் சிறந்தது என்று அமெரிக்க மலேசிய மாணவர் தேசியக் குழு கூறியுள்ளது.

அமெரிக்கக் கல்லூரிகள் அனைத்துலக மாணவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவாக இருப்பதாகவும் விதிமுறைகள் மாறும்போது தங்களுக்குத் தகுந்த வழிகாட்டுதலை வழங்கி உதவத் தயாராய் இருப்பதாகவும் அக்குழு சொன்னது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஅமெரிக்காகல்விவிசாவிதிமுறை