ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்குச் சிக்குன்குனியா நோய் கண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் 12 வயதுச் சிறுவன். காய்ச்சல், உடல் தடிப்பு, மூட்டு வலி முதலியவற்றால் சிறுவன் அவதியுறுகிறார். ஜூலை மாதம் குவாங்டோங் மாநிலத்தின் ஃபோஷான் நகருக்குச் சென்று திரும்பிய பிறகு சிறுவனுக்குச் சிக்குன்குனியா நோய் உண்டானது. ஹாங்காங்கின் பொதுச் சுகாதார அமைப்பு அதனைத் தெரிவித்தது.
ஃபோஷான் நகரில்தான் சிறுவனுக்கு நோய் தொற்றியிருக்க வேண்டும் என்று ஹாங்காங் அதிகாரிகள் நம்புகின்றனர். கொசுக்கள் அணுகாத சூழலில் மருத்துவக் கண்காணிப்புடன் வீட்டில் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹாங்காங் நகரில் நோய்ப்பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ளது. சிக்குன்குனியா நோய் கொசுக்களின் மூலம் பரவுகிறது. அதனால் பாதிக்கப்படுவோருக்கு ஏற்படும் மூட்டுவலி பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும்.
ஃபோஷான் நகரில் கடந்த சில வாரங்களில் 6,500க்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சீனாவின் இன்னொரு நகரம் அங்கிருந்து வருவோருக்குப் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஃபூஜியன் மாநிலத்தின் ஃபூச்சாவ் நகரம் கூறியது.
ஃபோஷான் நகருக்குச் சென்று திரும்பிய ஒருவருக்குச் சிக்குன்குனியா நோய் தொற்றியதாக மக்காவ் நகரம் ஆகஸ்ட் முதல் தேதி தெரிவித்திருந்தது. வட்டார அளவில் நோய் பரவும் அச்சத்தை அது ஏற்படுத்தியுள்ளது.