இணையத்தில் பரவும் பிள்ளை வன்கொடுமை உள்ளடக்கம் 114% அதிகரிப்பு

இணையத்தில் பரவும் பிள்ளை வன்கொடுமை உள்ளடக்கம் 114% அதிகரிப்பு

2 mins read
e8a46eca-919c-457c-9b15-531b02a82db3
பிள்ளை வன்கொடுமை உள்ளடக்கங்கள் இணையத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இணையத்தளங்களில் வலம்வரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைக் கொண்ட படங்கள் காட்சிகள் கடந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இணையத்தளத்திலிருந்து அத்தகைய உள்ளடக்கங்களைத் தேடிக் கண்டுபிடித்து நீக்குவதற்குப் பொறுப்புவகிக்கும் பிரிட்டி‌ஷ் அமைப்பு ஒன்று புதிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது.

பிரிட்டனின் இணையக் கண்காணிப்பு அறநிறுவனம், கடந்த ஆண்டு, 15,031 பிள்ளை வன்கொடுமை உள்ளடக்கங்களை வெவ்வெறு இணையத்தளங்களில் கண்டுபிடித்ததைக் குறிப்பிட்டது.

அது, 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கக் கிட்டத்தட்ட 114 விழுக்காடு அதிகம்.

சட்டவிரோதமான, பிள்ளை வன்கொடுமை உள்ளடக்கங்களைக் காண இணையத்தளங்கள் சிறப்பு அனுமதிகளை வழங்குவதாகவும் தெரியவந்தது.

அதில் பல வயதைச் சேர்ந்தோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் மோசமான வகையில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர்.

இணையத்தளப் பலவீனங்களைப் பயன்படுத்தும் குற்றவாளிகள்

“இணையத்தளக் கட்டமைப்புகளில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி பிள்ளை வன்கொடுமைக் காட்சிகளைப் பதிவேற்றி மிகப் பெரிய பலன்களைக் குற்றவாளிகளால் பெற முடிகிறது என்பது தெளிவாகப் புலப்படுகிறது,” என்றார் அறநிறுவனத் தலைமை நிர்வாகி கெர்ரி ஸ்மித்.

ஒவ்வொரு கட்டத்திலும் குற்றவாளிகளின் முயற்சிகளை முறியடிக்கவேண்டும் என்ற அவர், தொடக்கத்தில் சரியான உள்ளடக்கம் கொண்டவையாகத் தென்படும் இணையத்தளங்கள், பின்னர் பிள்ளை வன்கொடுமைகள் கொண்ட உள்ளடக்கங்களைக் காட்டுவதாகக் கூறினார்.

அத்தகைய பிள்ளை வன்கொடுமை உள்ளடக்கங்களுக்கு மின்னிலக்க நாணயம், ரொக்கம், கடன் அட்டை ஆகியவை மூலம் கட்டணங்கள் செலுத்தப்பட்டன.

உலக அளவில் பிள்ளை வன்கொடுமை உள்ளடக்கங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு, பிள்ளை வன்கொடுமை தொடர்பாக 21.3 மில்லியன் புகார்கள் அளிக்கப்பட்டதாகக் காணாமற்போன, துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளைகளுக்கான தேசிய நிலையம் தெரிவித்தது.

இணையக் கண்காணிப்பு அறநிறுவனம், பாலியல் ரீதியாகப் பணம் பறித்தல் தொடர்பில் 397 புகார்கள் பதிவானதைக் குறிப்பிட்டது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை 127 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்