ஜகார்த்தா: இந்தோனீசியாவின் யோக்யகார்த்தா நகரில் உள்ள பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் நிகழ்ந்த துன்புறுத்தல், கவனக்குறைவு சம்பவத்தின் தொடர்பில் மேலும் 14 பேரைச் சந்தேக நபர்களாக அந்நாட்டுக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களின் மொத்த எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது என்றும் அச்சம்பவம் நாடு முழுவதும் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் திங்கட்கிழமை (ஜூலை 6) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில், அந்தப் பராமரிப்பு நிலையத்தில் சோதனை நடத்திய காவல்துறையினர், இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலர், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
சில குழந்தைகள் கதவுகளுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தனர்.
குழந்தைகளைக் துன்புறுத்திய, கவனக்குறைவுடன் நடத்திய சந்தேகத்தின்பேரில், ‘லிட்டில் அரேஷா’ பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளர், தலைமையாசிரியர், பராமரிப்பாளர்கள் உட்பட 13 பேரைக் காவல்துறையினர் அப்போது கைதுசெய்தனர்.
கலாசார நகரமான யோக்யகார்த்தாவில் அமைந்துள்ள அந்த நிலையம் உரிமமின்றிச் செயல்பட்டுவந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதல் 13 சந்தேக நபர்கள் மீதான விசாரணையை அதிகாரிகள் நிறைவுசெய்துள்ளனர் என்றும் உள்ளூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முறையான குற்றப்பத்திரிகையை மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தயாரித்து வருகிறது என்றும் பாதுகாப்பு அதிகாரி அப்ரி சாவித்திரி தெரிவித்தார்.
வழக்கு விசாரணை எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், காவல்துறை விசாரணை தொடர்வதால் மேலும் பலர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

