சிறார் கொடுமை: நிறுவனத்துக்கு எதிரான வெவ்வேறு புகார்கள் மீது விசாரணை

1 mins read
ca62f5d2-f2cb-4fa0-96ab-ca5afdfe1588
குளோபல் இக்வான் நிறுவனத்தில் வேலை செய்தவர்களே அந்நிறுவனத்துக்கு எதிராக காவல்துறையிடம் புகார்களைத் தெரிவித்தனர். - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சிறார் பாலியல் கொடுமை சர்ச்சையில் சிக்கிய குளோபல் இக்வான் நிறுவனம் (GISB) வலுக்கட்டாயமாக ஆள்களை வேலை செய்யச் சொன்னதாக எழுந்துள்ள புகார்களை காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

அதுபோன்ற பத்துப் புகார்கள் மீதான விசாரணை தொடங்கி உள்ளதாக மலேசிய காவல்துறை தலைமை அதிகாரி ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்து உள்ளார்.

ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் அந்த விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 28) கூறினார்.

குளோபல் இக்வான் நிறுவனத்தில் இதற்கு முன்பு வேலை செய்தவர்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராக காவல்துறையில் பல்வேறு புகார்களை அளித்து இருந்தனர்.

அந்த நிறுவனத்திற்கு மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் ஆள்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் மையங்கள் இருப்பதாக ‘புகாஸ் மலேசியா’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட தகவலையும் காவல்துறை விசாரித்து வருவதாக திரு ரஸாருதீன் தெரிவித்தார்.

“சர்ச்சையில் சிக்கியவர்களைத் தங்க வைப்பதற்கும் சமய போதனை நடத்துவதற்கும் அந்த மையங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்றார் அவர்.

சிலாங்கூரிலும் நெகிரி செம்பிலானிலும் உள்ள 20 பராமரிப்பு இல்லங்களில் இருந்து செப்டம்பர் 11ஆம் தேதி 201 சிறுமியர் உள்ளிட்ட 402 சிறார்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த பராமரிப்பு இல்லங்கள் குளோபல் இக்வான் நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்