சிலாங்கூர்: தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்கள் பலரையும் துன்புறுத்திய குற்றத்திற்காக 23 வயது முகம்மது பாரூர் ரகிம் ஹிஷாமுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை பாரூர் ஒப்புக்கொண்டதை அடுத்து தண்டனை விதிக்கப்பட்டது.
பாரூர், ‘குளோபல் இக்வான் சர்விசஸ் அண்ட் பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ்’ (ஜிஐஎஸ்பி) நிறுவனத்தின்கீழ் இயங்கிவந்த சிறுவர் இல்லத்தில் பராமரிப்பாளராக இருந்ததாகக் கூறப்பட்டது.
சிறுவர்களைத் துன்புறுத்த பாரூர் பிரம்பொன்றைப் பயன்படுத்தியதாகவும் வேறு வகைகளில் தனது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாரூரின் பராமரிப்பில் துன்புறுத்தலுக்கு ஆளான மூன்று சிறுவர்களும் ஆண்கள். இவர்கள் 10 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
முன்னதாக, ஒரு பிள்ளை துன்புறுத்தப்படுவதைக் காட்டும் காணொளி தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை ஒன்றைத் தொடங்கினர்.
அதிகாரிகள் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கிய தேடுதலில் மீட்கப்பட்ட 572 சிறுவர்களில் அந்தச் சிறுவனும் அடங்குவார்.
தங்களின் தந்தையிடமிருந்து 2021ஆம் ஆண்டு முதல் பிரித்துக் கொண்டுசெல்லப்பட்ட சிறார்களில் இந்தச் சிறுவனும் ஒருவர் என்று அறியப்படுகிறது.