கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள பிரபல இஸ்லாமிய வர்த்தக அமைப்பான குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறார் நல இல்லங்களில் இருந்த சிறுவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த அமைப்புக்குச் சொந்ததமான 20 சிறார் நல இல்லங்களில் மலேசிய அதிகாரிகள் செப்டம்பர் 11ஆம் தேதியன்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இந்தச் சிறார் நல இல்லங்கள் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அமைந்துள்ளன.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சந்தேகிக்கப்படும் 400க்கும் மேற்பட்ட சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் சிறுவர்கள் 201 பேரும் சிறுமிகள் 201 பேரும் அடங்குவர்.
அவர்கள் ஒரு வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 171 சந்தேக நபர்கள் ஒரு வாரத்துக்கு விசாரணைக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையைப் பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சுகள், அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாக மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட அந்த இல்லங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டவையா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
விசாரணையில் உதவ மேலும் பல சாட்சிகள் முன் வருவர் என்றார் அவர்.
கைது செய்யப்பட்டவர்கள் வேறு பல குற்றங்களையும் புரிந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
அதிரடிச் சோதனை நடத்தப்பட்ட 20 இடங்களும் மூடப்பட்டுள்ளதாக திரு ரஸாருதீன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றார் அவர்.
அவர்களில் ஆசிரியர் ஒருவரும் விடுதி பராமரிப்பாளர்களும் அடங்குவர் என்று திரு ரஸாருதீன் கூறினார்.
இதற்கிடையே, காவல்துறையால் மீட்கப்பட்ட சிறுவர்களில் 13 பேர் காப்பாற்றப்படுவதற்கு முன்பு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட மற்ற சிறுவர்களின் மனநலம், உடல் ஆரோக்கிய நிலையைக் கண்டறிய அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சிறுவர்களின் உடல்களில் பழைய காயங்களின் வடுக்களும் புதிய காயங்களும் காணப்பட்டதாக திரு ரிஸாருதீன் தெரிவித்தார்.